ஒருபக்கம் மோடி தலைமையில் வளர்ச்சி; மறுபக்கம் ஊழல்வாதிகள்: நட்டா சாடல்
ஒருபக்கம் மோடி தலைமையில் வளர்ச்சி; மறுபக்கம் ஊழல்வாதிகள்: நட்டா சாடல்
ADDED : மே 28, 2024 02:08 PM

சிம்லா: 'ஒரு பக்கம் மோடியின் தலைமையில் நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது. மறுபுறம் ஊழல்வாதிகளின் கூட்டமான இண்டியா கூட்டணி உள்ளது' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கூறினார்.
ஹிமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் நட்டா பேசியதாவது: கொரோனா மற்றும் உக்ரைன் போரால், பெரிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிக்கலில் உள்ளது. ஆனால் இன்று பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, நாட்டின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். இந்தியாவில் படிக்காதவர்கள் அதிகம் உள்ளனர். டிஜிட்டலை என்ன பண்ணப் போறாங்க என காங்கிரசார் கூறினார்கள். இந்தியர்களின் திறனை அவர் அறிந்து கொள்ளவில்லை. இன்று காய்கறி விற்பவர் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்கிறார்.
ரூ.350 கோடி
காங்கிரஸ் எம்.பி., வீட்டில் இருந்து ரூ.350 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தும் போது நமது ராணுவ வீரர்களை பதிலடி கொடுக்கவும், துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தியாகிகளானார்கள். ஒரு பக்கம் மோடியின் தலைமையில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் ஊழல்வாதிகளின் கூட்டமான இண்டியா கூட்டணி உள்ளது. இவ்வாறு நட்டா பேசினார்.