ADDED : பிப் 25, 2025 11:58 PM

ஹாசன்; வெறுப்பு அரசியல் செய்வதால், ஹாசன் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக, காங்கிரஸ் அரசு மீது ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா கோபம் அடைந்து உள்ளார்.
ஹாசனில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகள் மீது வெறுப்பு அரசியல் செய்கிறது. இதனால் ஹாசன் மாவட்டத்தில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஹாசன் பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு பதில், அதற்கு தேவையான நிதி ஒதுக்கலாம். ஹாசன் மாவட்ட அரசு மருத்துவனையில், அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி தெரிந்ததும் மருத்துவமனை இயக்குநர் எதுவும் பேசுவது இல்லை.
ஹாசன் பல்கலைக்கழகத்தை மூட முடிவு செய்து இருக்கும், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை கூட்டத்தொடரில் ஹாசன் மாவட்ட பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் இணைந்து போராடுவோம்.
மழையால் பாதிக்கப்பட்ட சாலை பள்ளங்களை மூட, அரசு 12 கோடி ரூபாய் விடுவித்து உள்ளது. ஆனால் அந்த பணத்தை கலெக்டர் சத்யபாமா அப்படியே கருவூலத்தில் வைத்து உள்ளார்.
அங்கு வைத்து பூஜை செய்யவா முடியும். அந்த பணத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். மாண்டிா மாவட்டத்தில் அமைச்சர் செலுவராயசாமி என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும். மாண்டியா மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
மாண்டியாவிற்கு குமாரசாமியின் பங்களிப்பு என்ன என்பது மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் செலுவராயசாமி செய்தது என்ன. மாண்டியாவில் செய்த பணிகள் குறித்து அவருடன் விவாதிக்க நான் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

