பால ராமர் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய திலகம் அயோத்தி கோவிலில் பக்தர்கள் பரவசம்
பால ராமர் நெற்றியில் ஒளிர்ந்த சூரிய திலகம் அயோத்தி கோவிலில் பக்தர்கள் பரவசம்
ADDED : ஏப் 18, 2024 01:02 AM

அயோத்தி :ராம நவமியையொட்டி அயோத்தி ராமர் கோவிலில் பால ராமரின் நெற்றியில் நேற்று சூரிய திலகம் ஒளிர்ந்த காட்சியை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
ராமரின் பிறந்த தினமான ராம நவமி நாடு முழுதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, வடமாநிலங்களில் இந்த விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் திறக்கப்பட்டு, முதன்முறையாக ராம நவமி நேற்று கொண்டாடப்பட்டது.
ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள்
இந்நிகழ்வை மேலும் சிறப்பாக்கும் வகையில், கோவில் மூலவரான பால ராமரின் நெற்றியில், 58 மி.மீ., அளவு சூரிய திலகம் ஒளிரும் அரிய நிகழ்வு நேற்று அரங்கேறியது.
நண்பகல் 12:00 மணி முதல் 12:45 மணி வரை இந்த சூரிய திலகத்தை பக்தர்கள் கண்டு தரிசிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
இவற்றை, பக்தர்கள் காணும் வகையில் கோவில் வளாகங்களில் பெரிய எல்.இ.டி., திரைகள் அமைத்தும், தனியார் தெலைக்காட்சிகள் வாயிலாகவும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
இது தவிர, சமூக வலைதளங்களிலும், இந்த அரிய நிகழ்வு அதிகளவு பகிரப்பட்டது.
இந்நிகழ்வின்போது கோவிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ராம ராம என முழக்கமிட்டு இந்த நிகழ்வை தரிசித்தனர். இது ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த சூரிய ஒளியை, தத்ரூபமாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல் விழவைக்க, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர் டி.பி.கனுங்கோ கூறியதாவது:
அயோத்தி ராமர் கோவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் வடிவமைப்புக்கு ஏற்ப, மூன்று தளங்களின் வாயிலாக சூரிய ஒளிக்கதிர்களை கருவறைக்குள் செலுத்த முடிவு செய்தோம்.
இதற்காக, சூரியனின் பாதையை துல்லியமாக கணித்து, ராம நவமி தினத்தன்று எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டோம்.
இதன்படி, கோவிலின் உச்சியில் இருந்து, உயர்தர கண்ணாடிகள் மற்றும் லென்சுகளை பயன்படுத்தி, சூரிய ஒளிக்கதிர்களை நேரடியாக கர்ப்பக்கிரகத்தில் அமைந்துள்ள பால ராமரின் நெற்றியில் குறிப்பிட்ட நேரத்தில் விழும் வகையில் அமைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்பாடு
இந்த நிகழ்வு குறித்து அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் குப்தா கூறுகையில், “ராம நவமியை சிறப்பாக கொண்டாடும் வகையில் பக்தர்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம், சுமார் 45 நிமிடங்கள் வரை ஒளிர வைக்கப்பட்டது.
“இதற்கு எவ்வித மின்சாரமோ, பேட்டரியோ பயன்படுத்தவில்லை. இதுபோன்ற நிகழ்வு, ஆண்டுதோறும் ராம நவமி தினத்தன்று மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

