தர்மஸ்தலாவில் முதல்வர், துணை முதல்வர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பக்தர்கள் கோஷம்
தர்மஸ்தலாவில் முதல்வர், துணை முதல்வர் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பக்தர்கள் கோஷம்
ADDED : மே 25, 2024 10:41 PM

தர்மஸ்தலா, கர்நாடக அரசு, ஓரண்டை நிறைவு செய்ததால் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும், பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. எனவே முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் பைரதி சுரேஷ், வெங்கடேஷுடன், நேற்று மாலை தட்சிண கன்னடாவின், பிரசித்தி பெற்ற புண்ணியதலமான தர்மஸ்தலாவுக்கு வருகை தந்தனர்.
* தரிசனம்
வேட்டி, சால்வை அணிந்து மஞ்சுநாதசுவாமியை தரிசனம் செய்தனர். முதல்வரும், துணை முதல்வரும் சுவாமி தரிசனத்துக்கு சென்றபோது, வெளியே வரிசையில் நின்றிருந்த பக்தர்கள், 'மோடி கி ஜெ, ஜெய் ஸ்ரீராம், அகி கி பார் மோடி சர்க்கார்' என, கோஷமிட்டனர். இதனால் முதல்வரும், துணை முதல்வரும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர்.
சுவாமியை தரிசித்த பின், தர்மஸ்தலாவின் தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டேவை சந்தித்தனர். அப்போது துணை முதல்வர், வீரேந்திர ஹெக்டேவின் காலில் விழுந்து ஆசிபெற்றார். அதன்பின் இவரது இல்லத்தில் பேச்சு நடத்தினர்.
பின் சிவகுமார் கூறியதாவது:
முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பைரதி சுரேஷ், வெங்கடேஷுடன், மஞ்சுநாதசுவாமியை தரிசிக்க, தர்மஸ்தலாவுக்கு வந்தேன். இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலத்தில் மழை துவங்கியுள்ளது. விளைச்சல் செழிக்கட்டும், அமைதி நிலவட்டும் என, நாங்கள் பிரார்த்தனை செய்தோம்.
* பக்தர்கள் எண்ணிக்கை
எங்களின் 'சக்தி' திட்டத்தால், தர்மஸ்தலாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெலகாவி, பீதர், ஹூப்பள்ளி - தார்வாட், கலபுரகி என, பல மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர். இந்த விஷயத்தை வீரேந்திர ஹெக்டே, எங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
மஞ்சுநாதசுவாமியின் ஆசியும், மக்களின் ஆசியும் எங்களுக்கு உள்ளது. அனைவரின் வீடுகளுக்கும் 'சக்தி, அன்னபாக்யா, கிரஹலட்சுமி' ஆகிய திட்டங்கள் சென்றடைகின்றன. சில பெண்கள் முதல்வரிடம் கூறினர். அனைவரின் பிரார்த்தனையும், எங்களுக்கு சக்தியூட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.