மலர் சாகுபடி லட்சங்களை குவிக்கும் 'தார்வாட் புதுமைப்பெண்'
மலர் சாகுபடி லட்சங்களை குவிக்கும் 'தார்வாட் புதுமைப்பெண்'
ADDED : ஆக 03, 2024 11:22 PM

விவசாயம் செய்வதால், லாபத்தை விட நஷ்டமே அதிகம் என்று பலரும் சொன்னதை கேட்டிருப்போம். இதனால், ஏராளமானோர் விவசாயம் செய்வதை விட்டு விட்டு, மற்ற பணிகளுக்கு தாவி வருகின்றனர். நம்மில் சிலர் விவசாயம் செய்வதை விட்டு விடலாம் என்ற எண்ணத்துக்கும் வந்திருப்போம்.
ஆனால், விவசாயத்தில் லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி, சாதனை படைத்து வரும் ஒரு பெண், தார்வாடில் அசத்தி வருகிறார் என்றால் அது மிகையாகாது.
ஆம், ஹூப்பள்ளி - தார்வாட் மாவட்டம், தார்வாட் தாலுகா, கனகூரு கிராமம் பக்கம் சென்றால், சுகந்தராஜா மலரின் நறுமணம், மனதிற்கு இதமாக இருக்கும். அந்த பக்கம் சென்றவர்களுக்கு, அந்த அனுபவம் கிடைத்திருக்கும்.
இதை ஷரீபாபானு நதாபா என்ற பெண் விவசாயியின் சாதனை என்றால் நம்பி தான் ஆக வேண்டும். 10 ஆண்டுகளாக, தன் நான்கரை ஏக்கர் நிலத்தில் சுகந்தராஜா மலர் விளைவித்து வருகின்றார்.
இதன் மூலம் இப்பகுதியில் மலர் விளைச்சலில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளார். மாடுகளின் சாணத்தை உரமாக்கி, அதை செடிகளுக்கு துாவி இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார். இதனால் தான் செடிகளில் மலர்கள் பூத்து குலுங்குகிறது.
மாதத்துக்கு ஒருமுறை கிருமிநாசினி மருந்து தெளிக்கிறார். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மண்ணின் ஈரப்பதத்தை பார்த்து, தண்ணீர் பாய்ச்சுகிறார். குறைவான தண்ணீர் இருந்தால் போதுமானது என்று அவர் கூறுகிறார்.
இப்படி பிள்ளைகளை போன்று வளர்க்கும் மலர்களை, மூடைகளில் நிரப்பி, சரக்கு வாகனங்கள் மற்றும் ஸ்கூட்டர்களில் ஹூப்பள்ளி, தார்வாட் சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு பயன்படுத்திக் கொள்கிறார்.
தற்போது சுகந்தராஜா மலர், ஒரு கிலோ 35 - 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விழா காலங்களில் ஒரு கிலோ 150 - 200 ரூபாய்க்கு விற்பனையாகும். வரமஹாலட்சுமி விரதம், புரட்டாசி மாதம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால், கூடுதல் விலைக்கு விற்பனையாகும்.
மனைவிக்கு, கணவர் முகுந்தும்சாப் நதாபாவும் உதவி வருகிறார். பூத்து குலுங்கும் மலர்களை பார்க்க சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பலரும் வருகின்றனர்.
இது குறித்து, விவசாயி ஷரீபாபானு நதாபா கூறியதாவது:
ஒரு ஏக்கர் நிலத்தில், 80 முதல், 100 கிலோ சுகந்தராஜா மலர்கள் விளைகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு, 6,00,000 ரூபாய் முதல், 7,00,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
மலர்களை பறிப்பதற்கு, களை பறிப்பதற்கு தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். ஒரு முறை செடிகள் நட்டால், 3 மாதங்களில் மலர்களை பறிக்கலாம். மழை காலங்களில் அதிகமான மலர்கள் பூக்கும்.
ஈரப்பத மண்ணில் 2 ஆண்டுகள் வரையிலும், மற்ற மண்ணில் 3 ஆண்டுகள் வரையிலும் மலர்கள் பூக்கும்.
அதன் பின், நிலத்தில் கரையான் பரவ ஆரம்பிக்கும். எனவே அந்த செடிகளை வேறு நிலத்தில் நாட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -