ADDED : ஆக 08, 2024 06:04 AM
பெங்களூரு: பழைய மின்சார மீட்டர்களை மாற்றி, டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணிகளை பெஸ்காம் மேற்கொண்டுள்ளது. 95.92 சதவீதம் பணிகள் முடிந்நுள்ளன.
இது குறித்து, பெஸ்காம் வெளியிட்ட அறிக்கை:
ஆய்வின்படி, தற்போது 17.23 லட்சம் எலக்ட்ரோ மெக்கானிகல் மீட்டர்கள் இருந்தன. இவற்றை டிஜிட்டல் மீட்டராக மாற்றும் பணிகள், 2022 ஜூலையில் துவங்கப்பட்டது. இதற்காக பெஸ்காம் 285.65 கோடி ரூபாய் செலவிட்டது.
தற்போது 95.92 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. பாக்கியுள்ள பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்கப்படும். கிழக்கு மண்டலத்தில், 98.28 சதவீதம், வடக்கு மண்டலத்தில் 95 சதவீதம், தெற்கு மண்டலத்தில் 93.11 சதவீதம் மீட்டர்கள் டிஜிட்டலாக மாற்றப்பட்டன.
பெங்களூரில் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணிக்கான ஒப்பந்தத்தை, இரண்டு நிறுவனங்கள் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படும். சிங்கிள் பேஸ் டிஜிட்டல் மீட்டருக்கு, 934 ரூபாயும், த்ரி பேஸ் மீட்டருக்கு 2,312 ரூபாயை, பெஸ்காம் செலவிடுகிறது.
எலக்ட்ரோ மெக்கானிகல் மீட்டர்களில், மின் லோடு, பவர் பேக்டர், வோல்டேஜை பதிவு செய்யும் வசதி இருக்கவில்லை.
இதனால் பெஸ்காமுக்கு கட்டண வசூலில், நஷ்டம் ஏற்பட்டது. மீட்டர் ரீடிங் பற்றியும் புகார்கள் வந்துள்ளன. டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தியதால், நஷ்டத்தை தவிர்க்கலாம். மக்கள் சிறிய அளவில் பயன்படுத்தும் மின்சாரம் பற்றிய கணக்கும் கிடைக்கும்.
பெங்களூரில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிந்த பின், பெஸ்காம் எல்லைக்கு உட்பட்ட கிராமப்புறங்களில், டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் பணிகள் துவக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.