ரூ.718 கோடி போலி பில்களுக்கு ஒப்புதல்; தில்லாலங்கடி ஜி.எஸ்.டி., அதிகாரி கைது
ரூ.718 கோடி போலி பில்களுக்கு ஒப்புதல்; தில்லாலங்கடி ஜி.எஸ்.டி., அதிகாரி கைது
UPDATED : ஆக 14, 2024 05:47 AM
ADDED : ஆக 14, 2024 01:12 AM

புதுடில்லி, :மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி., செலுத்தும் நிறுவனங்கள், கொள்முதல் பில்களை சமர்ப்பித்து, உள்ளீட்டு வரியை திரும்ப பெறலாம். இந்த ஆவணங்களை சில நிறுவனங்கள் போலியாக தயாரித்து, ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபடுட்டு சிக்குவது தொடர் கதையாக உள்ளது.
சோதனை
இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மூன்று பேர், போலி நிறுவனங்கள் வாயிலாக பில்கள் தயாரித்து, 54 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி.,யை திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த மோசடியில் அவர்களுக்கு ஜி.எஸ்.டி., அதிகாரியே உதவியுள்ளார். இந்த விவகாரத்தை டில்லி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
மருத்துவ சாதனங்கள் இறக்குமதி, ஏற்றுமதி என்ற பெயரில் பல்வேறு போலி நிறுவனங்கள், டில்லியைச் சேர்ந்த ராஜ் சிங் சைனி, நரேந்திர குமார் சைனி மற்றும் முகேஷ் சோனி ஆகியோரால் துவங்கப்பட்டுள்ளன. இதற்கான திட்டத்தை டில்லி ஜி.எஸ்.டி., அதிகாரி பபிதா சர்மா வகுத்துத் தந்துள்ளார்.
போலி நிறுவனங்களின் பெயரில் கொள்முதல் பில்கள் தயாரிக்கப்பட்டு, அவர்கள் அதை பபிதா சர்மாவுக்கு அனுப்பினர், அவர் அதற்கு ஒப்புதல் தந்துள்ளார்.
இவ்வாறு கடந்த 2021 முதல் 2022 வரை பல கோடி ரூபாயை திரும்பப் பெற்றுள்ளனர்.
இதன்பின், பபிதா சர்மா வேறு பகுதிக்கு மாற்றப்பட்டார். அப்போது, 50 நிறுவனங்கள் பபிதா சர்மாவின் பகுதிக்கு தங்களின் கணக்குகளை மாற்றக் கோரின. அந்த கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது.
இதை அறிந்த ஜி.எஸ்.டி., கண்காணிப்பு அதிகாரிகள், அந்த 50 நிறுவனங்களில் சோதனையிட உத்தரவிட்டனர்.
விசாரணை
அப்போது தான் அவை அனைத்தும் போலி நிறுவனங்கள் என்பதும், இந்த மோசடியில் ஜி.எஸ்.டி., அதிகாரி பபிதா சர்மாவே ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த வழக்கு டில்லி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி பபிதா சர்மா, போலி நிறுவனங்கள் உருவாக்கிய மூன்று வழக்கறிஞர்கள், அவர்களுக்கு இ -- வே பில்களை வழங்கிய டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரை நேற்று கைது செய்தனர்.

