திங்களேஸ்வரா சுவாமிகள் போட்டி நவக்கிரஹ தீர்த்த மடாதிபதி எதிர்ப்பு
திங்களேஸ்வரா சுவாமிகள் போட்டி நவக்கிரஹ தீர்த்த மடாதிபதி எதிர்ப்பு
ADDED : ஏப் 18, 2024 04:21 AM

ஹூப்பள்ளி : ''திங்களேஸ்வரா சுவாமிகள் போட்டியிடும் இடம், சந்தர்ப்பம் சரியல்ல,'' என ஹூப்பள்ளியின் நவக்கிரஹ தீர்த்த மடத்தின் குணதரநந்தி மஹாராஜர் தெரிவித்தார்.
தார்வாட் லோக்சபா தொகுதியில், இம்முறை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு 'சீட்' கொடுக்க கூடாது என, சிரஹட்டி மடத்தின் திங்களேஸ்வரா சுவாமிகள், பா.ஜ.,வுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால் ஜோஷிக்கு தான் சீட் கிடைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த திங்களேஸ்வரா சுவாமிகள், இதே தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கு பக்தர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். அரசியலில் இறங்க விரும்பினால், மடத்தின் பொறுப்பில் இருந்து விலகும்படி வலியுறுத்தினர். சில மடாதிபதிகளும் கூட, சன்னியாசியாக ஆன்மிக சேவை செய்வதற்கு பதில், அரசியலில் ஈடுபடுவது சரியல்ல என, கருத்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக, ஹூப்பள்ளியின் நவக்கிரஹ தீர்த்த மடத்தின் குணதரநந்தி மஹாராஜர் கூறியதாவது:
தேர்தலில் போட்டியிட ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் திங்களேஸ்வரா சுவாமிகள் போட்டியிடும் தொகுதி, சந்தர்ப்பம் சரியில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பம் இருந்தால், முன்கூட்டியே அதற்காக தயாராகி இருக்க வேண்டும்.
யாராலும் சமுதாயத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. திங்களேஸ்வரா சுவாமிகளுக்கு அநியாயம் நடந்திருந்தால், அதை பேசி சரி செய்திருக்க வேண்டும். மடாதிபதிகள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற கட்டாயம் இல்லை. ஆனால், அதற்கு நிறைய நேரம் தேவைப்படும். திங்களேஸ்வரா சுவாமிகளுக்கு நேரம் குறைவாக உள்ளது. அவர் வெற்றி பெறுவது கஷ்டம். இந்தியா வலுவான நாடாக இருக்க வேண்டும். இத்தகைய தலைவர்கள், நாட்டுக்கு முக்கியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

