சுர்பூர் இடைத்தேர்தலில் 'அழுகாச்சி' பிரசாரம்: காங்கிரஸ் - பா.ஜ., போட்டா போட்டி
சுர்பூர் இடைத்தேர்தலில் 'அழுகாச்சி' பிரசாரம்: காங்கிரஸ் - பா.ஜ., போட்டா போட்டி
ADDED : ஏப் 30, 2024 10:19 PM

இடைத்தேர்தல் நடக்கும் சுர்பூர் தொகுதியில் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடகா - தெலுங்கானா எல்லையில் உள்ளது யாத்கிர். மன்னரான ராஜா வெங்கடப்பா நாயக், இப்பகுதியில் ஆட்சி செய்தார். இங்கு கோட்டைகள் நிறைந்த இடமாக சுர்பூர் உள்ளது. சுர்பூர், ஹைதராபாத் மாநிலத்தில் இருந்தபோது, 1952ல் தனி தொகுதியாக முதல் தேர்தலை சந்தித்தது. காங்கிரசின் கொல்லுார் மல்லப்பா வென்றார்.
மைசூரு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், 1957ல் நடந்த தேர்தலில், காங்கிரசின் குமார் நாயக், வெங்கடப்பா நாயக், 1962ல் சுதந்திரா கட்சியின் ராஜா கிருஷ்ணப்பா நாயக், 1967ல் காங்கிரசின் ஆர்.பி.என்.ஆர்.கே., நாயக், 1972ல் சுயேச்சையான ராஜா நாயக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கர்நாடக மாநிலமாக மாறிய பின்னர் 1978 தேர்தலில், இந்திரா காங்கிரசின் ராஜ்குமார் நாயக் வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1983, 1985, 1989ல் காங்கிரஸ் ராஜா மதன் கோபால் நாயக், காங்கிரசில் இருந்து வெற்றி பெற்றார்.
கடந்த 1994ல் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இருந்தும், 1999ல் காங்கிரசில் இருந்தும் ராஜா வெங்கடப்ப நாயக் வெற்றி பெற்றார்.
கடந்த, 2004 தேர்தலில் கன்னட நாடு கட்சியில் இருந்தும், 2008ல் பா.ஜ.,வில் இருந்தும், நரசிம்ம நாயக் என்ற ராஜு வென்றார்.
எம்.எல்.ஏ., மரணம்
கடந்த 2013 தேர்தலில் காங்கிரசின் ராஜா வெங்கடப்ப நாயக், மீண்டும் வெற்றி பெற்றார். 2018ல் நரசிம்ம நாயக் பா.ஜ., சார்பிலும், 2023ல் ராஜா வெங்கடப்ப நாயக் காங்கிரசிலும் வென்றனர்.
கடந்த ஏழு தேர்தல்களிலும் ராஜா வெங்கடப்ப நாயக், நரசிம்ம நாயக் இடையில், 'நீயா, நானா' போட்டி இருந்தது.
நான்கு முறை எம்.எல்.ஏ., ஆனாலும், ராஜா வெங்கடப்ப நாயக்கிற்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. கடந்த ஜனவரியில், வாரிய தலைவர் பதவி ஆறுதல் பரிசாக கிடைத்தது.
ஆனால், அவரது வாழ்க்கையில் 67 வயதில் விதி விளையாடியது. மாரடைப்பு ஏற்பட்டு, கடந்த பிப்ரவரியில் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு மே 7ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
அனுதாப ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவதற்காக, ராஜா வெங்கடப்ப நாயக் மகன் ராஜா வேணுகோபால் நாயக்கை, காங்கிரஸ் களம் இறக்கி உள்ளது.
அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இதை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்று, நரசிம்ம நாயக்கையே பா.ஜ., மீண்டும் நிறுத்தி உள்ளது. 'அப்பா இறந்து விட்டார்; நீங்கள் தான் என்னை ஆதரிக்க வேண்டும்' என, ராஜா வேணுகோபால் நாயக் பிரசாரம் செய்கிறார்.
நான் ஒரு அனாதை
'ராஜா வேணுகோபால் நாயக்கிற்கு, அப்பா தான் இறந்து விட்டார். எனக்கு பெற்றோரே இல்லை. நான் ஒரு அனாதை. உங்களை நம்பி தான் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என, பா.ஜ.,வின் நரசிம்ம நாயக் பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபூரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ராஜா வேணுகோபால் நாயக் வெற்றி பெறாவிட்டால், எனது அமைச்சர் பதவி போய்விடுமென, மக்களிடம் உருக்கமாக பிரசாரம் செய்கிறார்.
அனுதாப ஓட்டுகள் மூலம் வெற்றி பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நமது நிருபர் -