தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்; தேன் கூட்டில் கல்லெறிந்த முதல்வர் சித்தராமையா
தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்குவதில் பாரபட்சம்; தேன் கூட்டில் கல்லெறிந்த முதல்வர் சித்தராமையா
ADDED : ஜூலை 02, 2024 10:41 PM
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும், மாநில அரசு சிறப்பு நிதியுதவி வழங்கியுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்துள்ளது. அரசின் செயல் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதலுக்கு வழி வகுத்துள்ளது.
கர்நாடகாவில் ஆட்சிக்கு வரும் அரசுகள், எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு வளர்ச்சி நிதி வழங்குவது வழக்கம். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சிக்கு வந்த பின் எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படவில்லை.
பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து, இரண்டாவது முறையாக முதல்வரான குஷியில், சித்தராமையா படிப்படியாக ஐந்து வாக்குறுதித் திட்டங்களையும் செயல்படுத்தினார். 'சக்தி, கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி, அன்னபாக்யா, யுவநிதி' என, ஐந்து திட்டங்களும் மக்களை சென்றடைந்துள்ளன.
இந்தத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும், 60,000 கோடி ரூபாய் வரை செலவாகிறது. இதற்கான நிதியை திரட்ட அரசு பல வழிகளை கையாள்கிறது. அண்மையில் பால், பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டது.
இந்தத் திட்டங்களுக்கே அரசின் பெருமளவில் நிதி செலவாவதால், எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி ஒதுக்க முடியவில்லை. இதனால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே அதிருப்தி தெரிவித்தனர்.
'வளர்ச்சிப் பணிகள், அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நிதியில்லை. தொகுதி மக்களிடம் தலை காண்பிக்க முடியவில்லை.
வாக்குறுதித் திட்டங்களுக்கே, பெருமளவில் தொகையை செலவிட்டால், தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்கு நாங்கள் என்ன செய்வது?' என கேள்வி எழுப்பினர். சிலர் ராஜினாமா செய்வதாகவும் எச்சரித்தனர். லோக்சபா தேர்தலில், கட்சி பின்னடைவை சந்திக்கும் என, எச்சரித்தனர்.
அதேபோன்று காங்கிரஸ், வெறும் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. வரும் நாட்களில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல், மாவட்ட, தாலுகா, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடக்கவுள்ளது. எனவே மாநில அரசு எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
ஆனால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கியிருப்பது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. ஆளுங்கட்சியிலும் கூட, அனைவருக்கும் நிதி கிடைக்கவில்லை.
முக்கியமான தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதி வழங்கப்பட்டது.
இதுவும் கூட ஒரே விதமாக இல்லை.
சில எம்.எல்.ஏ.,க்களுக்கு, 15 முதல் 20 கோடி ரூபாய், பலருக்கு ஐந்து முதல் 10 கோடி ரூபாய், மேலும் பலருக்கு இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ., தன்வீர் சேட்டின், நரசிம்மராஜ தொகுதிக்கு, 10 கோடி ரூபாய், பிரகாஷ் கோலிவாடின், ராணி பென்னுார் தொகுதிக்கு, 1.57 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
சில தொகுதிகளுக்கு அதுவும் கிடைக்கவில்லை. பாரபட்சம் பார்ப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் கொதிப்பில் உள்ளனர். ஏற்கனவே முதல்வர், துணை முதல்வர் சர்ச்சையால், கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு நிதியுதவி வழங்குவதில், பாரபட்சம் பார்த்ததன் மூலம், தேன்கூட்டில் அரசு கல் எறிந்துள்ளது.
- நமது நிருபர் -