பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமாருடன் சந்திப்பு
பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிவகுமாருடன் சந்திப்பு
ADDED : மார் 22, 2024 05:51 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலை ஒட்டி, துணை முதல்வர் சிவகுமாரை, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் நேற்று சந்தித்து பேசினர்.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் யஷ்வந்த்பூர் சோமசேகர், எல்லாப்புரா சிவராம் ஹெப்பார். இவர்கள் இருவரும் முன்பு, காங்கிரசில் இருந்தவர்கள். பின்னர் பா.ஜ.,வில் சேர்ந்தனர். தற்போது பா.ஜ., தலைவர்களுடன் ஏற்பட்ட மோதலால், மீண்டும் காங்கிரஸ் பக்கம் சாய நினைக்கின்றனர். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து உள்ளனர்.
கடந்த மாதம் நடந்த ராஜ்யசபா எம்.பி., தேர்தலில், சோமசேகர் கட்சி மாறி ஓட்டு போட்டார். சிவராம் ஹெப்பார் ஓட்டுப்பதிவை புறக்கணித்தார்.
இந்நிலையில் சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும், பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில், துணை முதல்வர் சிவகுமாரை நேற்று காலை சந்தித்து பேசினர். லோக்சபா தேர்தல் குறித்து சிவகுமாருடன், அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
தீ மூட்டும் வேலை
பின்னர் வெளியே வந்த, சோமசேகர் அளித்த பேட்டி:
பெங்களூரு நகரில் ஏற்பட்டு உள்ள தண்ணீர் பிரச்னையை சரிசெய்யும்படி, துணை முதல்வர் சிவகுமாரிடம் கோரிக்கை வைத்தேன். குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவரிடம் பேசும்படி கூறினேன். என் முன்பு வைத்தே மொபைலில் அழைத்து பேசினார். கர்நாடக பா.ஜ., தலைவர்கள் மீது, எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.
பெங்களூரு வடக்கு தொகுதியில் சந்திரேகவுடா ஐந்து ஆண்டுகளும், சதானந்த கவுடா பத்து ஆண்டுகளும், பா.ஜ., - எம்.பி.,யாக இருந்தனர். பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., கட்சி தொண்டர்களை சமமாக நடத்தினர். தீ மூட்டும் வேலையை அவர்கள் செய்யவில்லை. ஆனால் இப்போது எம்.பி., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள, மத்திய அமைச்சர் ஷோபா, எனது யஷ்வந்த்பூர் தொகுதியில், அவரது வேலையை காட்டுகிறார்.
நோட்டீசுக்கு பதில்
எனது தொகுதிக்கு செல்ல எனக்கே பயமாக உள்ளது. யார் எந்த நேரத்தில் என்ன பேசுவர் என்றே தெரியவில்லை. கூடிய விரைவில் போலீஸ் கமிஷனரை சந்தித்து, எனக்கு பாதுகாப்பு கேட்பேன். ஷோபா எம்.பி., ஆக வந்தாரா அல்லது தீ வைக்க வந்தாரா என்று தெரியவில்லை.
தமிழகத்தில் இருந்து வந்து, பெங்களூரில் குண்டு வைக்கின்றனர் என்கிறார். பெங்களூரு அமைதியான நகரம். மக்களிடம் பிரச்னையை ஏற்படுத்தும் வேலையை அவர் செய்ய வேண்டாம். ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி, ஓட்டு போட்டதற்காக என்னிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதில் அளித்து உள்ளேன். என்ன நடவடிக்கை எடுப்பர் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அநியாயமா?
சிவராம் ஹெப்பார் கூறுகையில், ''துணை முதல்வர் சிவகுமார் கையில், நீர்பாசனத்துறை உள்ளது. எனது தொகுதியில் நீர்பாசனத் துறை சார்பில், சில பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. அதுகுறித்து அவரிடம் பேசினேன். ராஜ்யசபா தேர்தலில் ஓட்டு போட நான் வரவில்லை.
''இதற்கு எனக்கு நோட்டீஸ் அனுப்பினர்; பதில் அனுப்பி உள்ளேன். அந்த பதிலில் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கொறடா உத்தரவை மீறி கட்சி மாறி, பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்டதை குறிப்பிட்டு உள்ளேன். ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்தால் நியாயம். கர்நாடகாவில் நடந்தால் அநியாயமா,'' என்றார்.

