கொஞ்சம் யோசியுங்கள்... ராஜினாமா முடிவில் அதிருப்தி எம்.பி.,; சமாதான முயற்சியில் முதல்வர் மம்தா
கொஞ்சம் யோசியுங்கள்... ராஜினாமா முடிவில் அதிருப்தி எம்.பி.,; சமாதான முயற்சியில் முதல்வர் மம்தா
ADDED : செப் 09, 2024 08:29 AM

கோல்கட்டா: பெண் டாக்டர் படுகொலை சம்பவத்தில் அரசின் செயல்பாட்டின் மீதான அதிருப்தியால், ராஜினாமா முடிவை கையில் எடுத்துள்ள ஆளும் திரிணமுல் கட்சி எம்.பி.,யை முதல்வர் மம்தா பானர்ஜி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேற்குவங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நீதி கேட்டு சாலையில் இறங்கி போராடி வருகின்றனர்.
அதிருப்தி
இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், குற்றவாளிக்கு தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று மக்கள் தங்கள் போராட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றனர். இது ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, இந்த வழக்கில் ஆர்.ஜி.கர்., மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷுக்கு ஆதரவாக முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதிலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் கிளம்பின.
ராஜினாமாஇந்த சூழலில், மம்தா பானர்ஜிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும் விதமாக, திரிணமுல் கட்சி ராஜ்யசபா எம்.பி., ஜவஹர் சர்கார் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் .
கடிதம்
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ஊழல் அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் உயர் பதவிகளை பெறுவதை என்னால் ஏற்று கொள்ள முடியாது என்றும், மேற்குவங்க அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மம்தா பழைய பாணியில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்திருந்ததாகவும், அது நடக்காமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
நாளை மறுதினம் (செப்.,11) டில்லி சென்று ராஜ்யசபா சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மம்தாவின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சித்து விட்டு, சொந்த கட்சி எம்.பி., பதவியையே ராஜினாமா செய்வது திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வேண்டுகோள்இந்த நிலையில், அதிருப்தி எம்.பி., ஜவஹர் சர்காரை செல்போனில் தொடர்பு கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், எந்த விவகாரமாக இருந்தாலும், பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.