அவுரங்காபாத் பெயர் மாற்றம் எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
அவுரங்காபாத் பெயர் மாற்றம் எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
ADDED : மே 09, 2024 12:49 AM
மும்பை, மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் மற்றும் ஒஸ்மானாபாத் மாவட்டங்களின் பெயர் மாற்றத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள அவுரங்காபாத் மாவட்டம் சத்ரபதி சம்பாஜி நகர் என்றும், ஒஸ்மானாபாத் மாவட்டம் தாராஷிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை 2022ல் ஒப்புதல் அளித்தது.
பெயர் மாற்றத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்து, அதற்கான அனுமதியையும் அளித்தது. இதையடுத்து, இரு நகரங்களின் பெயர் மாற்றத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. பெயர் மாற்ற முடிவை எதிர்த்து, மாவட்டங்களைச் சேர்ந்த பலர் பொதுநல மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதற்கு பதிலளித்த மஹாராஷ்டிர அரசு, 'வரலாற்று சிறப்பிற்காக மட்டுமே பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை' என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
மாநில அரசின் அறிவிப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இரு நகரங்களின் பெயர் மாற்றம் தொடர்பான அறிவிப்பில், சட்டத்துக்கு புறம்பாக எதுவும் இல்லை. ஆகையால், இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.