தாமதங்களால் மக்களுக்கு அதிருப்தி தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு
தாமதங்களால் மக்களுக்கு அதிருப்தி தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு
ADDED : ஆக 04, 2024 01:33 AM
புதுடில்லி: ''நீதிமன்ற தாமதங்களால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால்தான், லோக் அதாலத் போன்ற சமரச நடைமுறைகளை விரும்புகின்றனர்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின், 75வது ஆண்டையொட்டி, ஒரு வாரத்துக்கு, லோக் அதாலத் நடத்தப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் வகையில், இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விரைவில் தீர்வு
இதன் நிறைவு விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று பேசியதாவது:
லோக் அதாலத் என்பது, ஒரு பிரச்னை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே பேச்சு நடத்தி, தீர்வு காண்பதாகும். பரஸ்பரம் ஒப்புதலுடன், இதில் முடிவு எடுக்கப்படுவதால் மேல்முறையீடு செய்ய முடியாது.
தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தங்களுடைய பிரச்னைக்கு மாற்று வழியில் மிக விரைவாக தீர்வு காண்பதற்கு விரும்புகின்றனர்.
நம்முடைய நீதிமன்ற நடவடிக்கைகள், ஒரு தண்டனையாக உள்ளது. இதுவே நீதிபதிகளின் கவலையாகவும் உள்ளது. வழக்குகளில் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமும்.
உச்ச நீதிமன்றம் டில்லியில் இருந்தாலும், அது நாட்டின் தலைமை நீதிமன்றமாகும். அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில், பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதலில், ஏழு அமர்வுகளுடன், இந்த லோக் அதாலத் நடத்த திட்டமிட்டோம்.
தற்போது, 13 அமர்வுகளுடன் விசாரணை நடத்தப்பட்டது. லோக் அதாலத் என்பது, மக்களின் வீடுகளுக்கு நீதியை கொண்டு செல்வதாகும். இதனால் மக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் பேசியதாவது:
பிரச்னைகளுக்கு சமரச தீர்வு காண்பது என்பது நம் கலாசாரத்துடன் தொடர்புடையதாகும்.
சமாதானம்
மஹாபாரத காலத்தில், பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்தார் பகவான் கிருஷ்ணர். இதுதான், உலகின் முதல் லோக் அதாலத் முயற்சியாகும்.
இங்கு, குடும்ப நல வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. ஒரு காலத்தில், குடும்பத்தில் பெரியவர்கள் தலையிட்டு, மத்தியஸ்தம் செய்து, சமாதானப்படுத்தினர். ஆனால், தற்போது சிறிய சிறிய குடும்ப பிரச்னைக்கும் நீதிமன்றத்துக்கு வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.