காங்., பிரிவுகள் விரைவில் கலைப்பு: மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை
காங்., பிரிவுகள் விரைவில் கலைப்பு: மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை
ADDED : மே 22, 2024 06:44 AM

பெங்களூரு : ''கர்நாடகா மாநில காங்கிரசின் அனைத்து பிரிவுகளையும் கலைக்கும் நேரம் வந்துள்ளது. கதர் சட்டை அணிந்து கொண்டு, காரில் வந்து, எம்.எல்.சி., பதவி தாருங்கள், வாரிய தலைவர் பதவி தாருங்கள் என்று கேட்டால், என்னிடம் நடக்காது,'' என்று துணை முதல்வர் சிவகுமார், கட்சியினரை எச்சரித்தார்.
காங்கிரஸ் சார்பில், மறைந்த பிரதமர் ராஜிவ் நினைவு நாளை ஒட்டி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் கட்சி அலுவலகத்தில், நேற்று நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல்
மாநில தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார், ராஜிவ் உருவ படத்துக்கு மலர் துாவி வணங்கினார். பின், கட்சி பிரமுகர்கள் மத்தியில் சிவகுமார் பேசியதாவது:
நேரு, ராஜாஜி, கெங்கல் ஹனுமந்தையா, பி.டி.ஜாட்டி, மல்லிகார்ஜுன கார்கே என ஏராளமான தலைவர்கள், உள்ளாட்சி தேர்தல் மூலம், தேசிய தலைவர்களாக உயர்ந்தனர். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
கட்சியின் அனைத்து பிரிவுகளையும் கலைக்கும் நேரம் வந்துள்ளது. முதலில் கட்சி பணியை செய்ய வேண்டும். வெறும் அடையாள அட்டைக்காக அலுவலகத்துக்கு வருவோர், வீட்டிலேயே இருங்கள்.
கதர் சட்டை அணிந்து கொண்டு, காரில் வந்து, எம்.எல்.சி., பதவி தாருங்கள், வாரிய தலைவர் பதவி தாருங்கள் என்று கேட்டால், என்னிடம் நடக்காது. கட்சி பணி செய்வோருக்கு மட்டுமே முன்னுரிமை.
ஓட்டுகள் முக்கியம்
பூத் அளவில் கட்சிக்கு, அதிக ஓட்டுகள் பெற்று தந்தால் மட்டுமே பதவி கேட்டு வர வேண்டும். ஓட்டுகள் பெற்று கொடுக்காதவர்கள், எப்படி தலைவராக முடியும். முடியாதவர்கள் விட்டு விடுங்கள், நாங்கள் மற்றவர்களை பார்த்து கொள்கிறோம்.
நான் எத்தனை நாட்கள் மாநில தலைவராக இருப்பேனோ தெரியாது. ஆனால், அதிகாரத்தில் இருந்து இறங்கும் போது, கட்சிக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்து விட்டு தான் செல்வேன்.
கட்சி பணி செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திட்டம் வகுக்கப்படும்.
இவ்வாறு அவர்பேசினார்.

