ADDED : மார் 30, 2024 06:46 AM

சென்னை: அனைத்து பல்கலைகளும், தொலைநிலை படிப்பில், தனியாருக்கு உரிமம் வழங்கி, மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொலைநிலை படிப்புகள் மற்றும் ஆன்லைன் படிப்புகளுக்கு, மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகள், மாணவர் சேர்க்கையை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும்.
எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும், 'பிராஞ்சைசி' எனப்படும் உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் மற்றும் கல்வி பயன்பாட்டு கருவிகளை, தனியார் நிறுவனங்கள் வழியே வழங்கக்கூடாது.
பல்கலைகள் தங்களுக்கு வழங்கப்பட்ட எல்லைகளை தாண்டி, தொலைநிலை படிப்புகளை நடத்தக்கூடாது. மாநில அளவிலான பல்கலைகள், வேறு மாநிலங்களில் தொலைநிலை படிப்பை நடத்தக்கூடாது.
வேளாண்மை, தோட்டக்கலை, விமான போக்குவரத்து, சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், பார்மசி, நர்சிங், தொழில்முறை தெரபி, பிசியோதெரபி, இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட, 13 வகை படிப்புகளை, ஆன்லைன் மற்றும் தொலைநிலையில் நடத்த அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

