ஜனநாயக முறைப்படி திமுக களம் கண்டது: என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயக முறைப்படி திமுக களம் கண்டது: என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஜூலை 14, 2024 03:55 PM

சென்னை: தி.மு.க., வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி குறித்து, தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத் தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.
ஜனநாயக நெறிமுறை
மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். ஆனால், விக்கிரவாண்டியில் ஓர் இடைத்தேர்தல் என்பதுதான் கொஞ்சமும் எதிர்பாராதது. தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது. வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அறிவாலயத்தில் திரண்டிருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இண்டியா கூட்டணி
தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.