ஜனநாயகத்தை காப்பாற்ற இதை செய்யுங்கள்: கெஜ்ரிவால் பேச்சு
ஜனநாயகத்தை காப்பாற்ற இதை செய்யுங்கள்: கெஜ்ரிவால் பேச்சு
ADDED : மே 26, 2024 05:05 PM

சண்டிகர்: ஜனநாயகத்தை காப்பாற்ற பா.ஜ.,வை தோற்கடிப்பது அவசியம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்த பின் தேர்தல் நடந்தது. ரஷ்யாவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக புடின் தனது எதிரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினார். எதிரணியினரை குறிவைத்து தேர்தலில் வெற்றி பெறும் சூழல், நம் நாட்டிலும் உருவாகி வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்ற பா.ஜ.,வை தோற்கடிப்பது அவசியம்.
பெரிய எஃகு ஆலை
பஞ்சாபில் உள்ள 13 லோக்சபா தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறச் செய்தால், அது வலுவடைந்து, மத்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும். பஞ்சாபில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குமுன்பு, தொழில்துறையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. ரூ. 56,000 கோடி மதிப்புள்ள முதலீடுகள் பஞ்சாபிற்கு வந்துள்ளது. டாடாவின் இரண்டாவது பெரிய எஃகு ஆலை பஞ்சாபில் அமைக்கப்படுகிறது.
பொருளாதாரம்
ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளின் நிறுவனங்களின் ஆலைகள் அமைக்கத் துவங்கி உள்ளன. கமிஷன் ஏஜெண்டுகளையும், வியாபாரிகளையும் இடைத்தரகர்களாக நரேந்திர மோடி கருதுகிறார். அவர்களை நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நாங்கள் கருதுகிறோம். நாட்டின் பொருளாதாரத்திற்கு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வர்த்தகர்களும், கமிஷன் ஏஜெண்டுகளும் முக்கியம். அவர்கள் இல்லை என்றால், நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது. இவ்வாறு அவர் பேசினார்.