நாடு முழுதும் டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்
நாடு முழுதும் டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்
ADDED : ஆக 16, 2024 10:34 PM
புதுடில்லி:மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு, நாடு முழுதும் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய டாக்டர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கும், அரசு மருத்துவமனையை சூறையாடிய சம்பவத்திற்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் நாடு முழுதும் பணியாற்றும் டாக்டர்கள், இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
அலட்சியத்தால், இதுபோன்ற கொடூரமான குற்றத்தை நடக்க அனுமதித்த அதிகாரிகள், சி.பி.ஐ., விசாரணை நடக்கும்போது, மீண்டும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிவிட்டனர். இத்தகைய குற்றங்களுக்கு தண்டனையின்றி சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை சங்கம் கண்டிக்கிறது.
இன்று திட்டமிட்டிருந்த அறுவைச்சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும். வெளிப்புற நோயாளிகளுக்கான சேவைகள் வழங்கப்பட மாட்டாது. எனினும், அவசர சிகிச்சை பிரிவு உட்பட மற்ற அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படும்.
சனிக்கிழமை காலை 6:00 மணி முதல் 24 மணி நேரத்திற்கு இந்த போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

