'எடியூரப்பாவை தட்டி கேட்க குமாரசாமிக்கு தைரியம் உண்டா?'
'எடியூரப்பாவை தட்டி கேட்க குமாரசாமிக்கு தைரியம் உண்டா?'
ADDED : ஜூலை 16, 2024 05:02 AM

பெங்களூரு : ''மூடாவில் மனை ஒதுக்கப்பட்டதில் தேவகவுடா குடும்பத்தினர் பற்றி விமர்சித்த பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை தட்டி கேட்க, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு தைரியம் உள்ளதா,'' என சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மூடாவில் முதல்வர் சித்தராமையா ஊழல் செய்துள்ளதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார். இவ்வழக்கு, ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தற்போது மூடா ஊழல் குறித்து குமாரசாமி பேசி வருகிறார். கடந்த 2011ல் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, மார்ச் 17ம் தேதி சட்டசபையில், தனது உரையின் போது, மூடாவில் மனை ஒதுக்கீட்டில் தேவகவுடா குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக பேசினார். இப்படி இருக்கும் போது, பா.ஜ.,வுடன் ம.ஜ.த.,வினர் இணைந்து போராட்டம் நடத்துவது எனக்கு புரியவில்லை.
அஹிந்தா தலைவர், முதல்வராக இருப்பது உங்களால் பொறுத்து கொள்ள முடியாது. உங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், துணை முதல்வராக உள்ளார். இதற்காக நீங்கள் சந்தோஷப்பட வேண்டும். ஆனால், இன்னொரு சமூகம் வளர்வது உங்களுக்கு பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

