ADDED : ஆக 03, 2024 12:49 AM
கரீம் நகர், தெலுங்கானாவின் வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை தெரு நாய்கள் கடித்து குதறி, அவரது உடல் பாகங்களை சாப்பிட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள முஸ்தாபாத் கிராமத்தில், குடிசை வீட்டில் 82 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருந்த அந்த மூதாட்டியை, அருகில் வசித்து வந்த அவரது உறவினர்கள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக படுத்து உறங்கினார். அப்போது, அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் உள்ளே நுழைந்து, படுக்கையில் இருந்த மூதாட்டியை கடித்து குதறின.
இதில், அவரது உடல் உறுப்புகள் சிலவற்றையும் தெரு நாய்கள் கடித்து தின்றதில், அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஏற்கனவே, கடந்த மாதம் 16ம் தேதி மேட்சல் - மல்காஜ்கிரி மாவட்டத்தின் ஜவஹர் நகரில், 18 மாத ஆண் குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறிய அதிர்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதன் காரணமாக, மாநிலம் முழுதும் தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.