ADDED : மார் 11, 2025 03:52 AM

புதுடில்லி : “வரிகளை குறைக்கும்படி தொடர்ந்து கேட்காதீர்கள். வரிகள் இல்லாமல் அரசால் எப்படி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும்?” என, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்கும்படி தொடர்ந்து கேட்காதீர்கள். அவ்வாறு நாங்கள் வரியைக் குறைத்தால், மேலும் குறைக்கும்படி கேட்பீர்கள்; இதுதான் மனித இயல்பு.
நாங்கள் வரியை குறைக்க விரும்புகிறோம். ஆனால் வரி வருவாய் இல்லாமல், மக்கள்நலத் திட்டங்களை அரசால் எப்படி செயல்படுத்த முடியும்? பணக்காரர்களிடம் இருந்து வரியை வசூலித்து, ஏழை மக்களின் நலனுக்காகவே செலவிடுகிறோம். அரசுக்கென்றும் சில எல்லைகள் உள்ளன.
தற்போது, 'லாஜிஸ்டிக்' எனப்படும் சரக்கு கையாளும் செலவு 14 முதல் 16 சதவீதமாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இதை, 9 சதவீதமாக குறைக்க உள்ளோம். இதன் வாயிலாக சர்வதேச அளவில் நம்மால் போட்டியிட முடியும்.
சீனாவில் இந்த செலவு 8 சதவீதமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 12 சதவீதமாக உள்ளது. இந்திய நிறுவனங்கள், தரத்தில் சமரசம் செய்யாமல், உற்பத்தி செலவைக் குறைக்க முயற்சிக்க வேண்டும்.
மூலதன முதலீடுகள் வாயிலாக, இந்தியா அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. நீங்கள் செல்வத்தை மட்டும் உருவாக்கவில்லை; வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறீர்கள். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நம் நாடு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.