ADDED : செப் 07, 2024 07:47 AM

பெங்களூரு: “அதிகாரிகளை சாரென அழைக்காதீர்கள்,” என, அமைச்சர்களுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவு போட்டுள்ளார்.
முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான்சவுதாவில், அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஒவ்வொரு அமைச்சர்களிடம் அவர்களின் துறைகளில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, முதல்வர் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு அமைச்சர், தனது துறை தொடர்பாக பதில் அளிக்கும்போது, துறைக்கு உட்பட்ட அதிகாரிகளை சார் என்று குறிப்பிட்டார். இதனால் சித்தராமையா கடும் கோபம் அடைந்தார்.
அமைச்சர்களை பார்த்து, “அதிகாரிகளை சார் என்று அழைக்காதீர்கள். அரசியலமைப்பு ரீதியாக நீங்கள் தான், உங்கள் துறையின் தலைவர்கள். அதிகாரவர்க்கம் உங்கள் வசம் உள்ளது. அதிகாரிகளுக்கு ஐஸ் வைத்து, உங்கள் பதவியை தக்கவைத்துக் கொள்ள பார்க்கிறீர்களா?” என, கோபமாக கேள்வி எழுப்பினார்.
இதனால் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒரு கணம் உறைந்து போயினர். ஒரு நிமிட அமைதிக்கு பின், கூட்டம் தொடர்ந்தது.