வேட்பாளர்களை நுழைய விடாதீர்கள் குருபூர் சாந்தகுமார் ஆவேசம்
வேட்பாளர்களை நுழைய விடாதீர்கள் குருபூர் சாந்தகுமார் ஆவேசம்
ADDED : ஏப் 12, 2024 05:41 AM

பெலகாவி: ''கர்நாடக விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து யாரும் கேட்பதில்லை. ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை கண்டித்து, கிராமங்களுக்குள் நழைய விடாமல் தடுக்க வேண்டும்,'' என கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்தார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வறட்சியால் வாடும் விவசாயிகளின் துயரங்களை கேட்க யாருமில்லை. அதிகாரத்துக்காக அரசியல் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். வணிகத்தை விட லாபம் தரும் துறையாக அரசியல் மாறியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்காக போராடுவதாக நாடகம் ஆடுகின்றன. இதை விட்டு விட்டு தீர்வு சொல்லுங்கள். இல்லையெனில் ஓட்டு கேட்டு வராதீர்கள். ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை, கிராமத்துக்குள் நுழைய விடாமல் விவசாயிகள் தடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை உள்ளது. கால்நடைகளுக்கு கூட தீவனம் கிடைக்கவில்லை. ஆனால், தேர்தலை காரணம் காண்பித்து, அதிகாரிகள் விவசாயிகளை புறக்கணித்து வருகின்றனர்.
ஆட்சியை பிடிக்கும் வெறியில், அரசியல் தலைவர்கள் உள்ளனர்.
ஆனால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. கடுமையான வறட்சியால், ஆழ்துளை கிணறுகள் வறண்டு, விவசாயிகளின் பயிர்கள் கருகி வருகின்றன. இதை அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளவில்லை.
விவசாயிகள் விழித்து கொள்ள வேண்டும். கிராமங்களில் கோவில்கள் கட்டுவதை விடுத்து, ஏரிகளை துார்வார வேண்டும்; புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
மாநிலத்தில் உள்ள 78 சர்க்கரை ஆலைகள், 5 கோடியே 80 லட்சம் டன் கரும்பை பயன்படுத்தி உள்ளது.
ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 2,600 கோடி ரூபாய் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது. இத்தகைய ஆலைகள் மீது சர்க்கரை வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

