கோடை வெயிலில் கருப்பு கோட் வேண்டாமே... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் கோரிக்கை
கோடை வெயிலில் கருப்பு கோட் வேண்டாமே... சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் கோரிக்கை
ADDED : மே 28, 2024 01:32 AM

புதுடில்லி, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் ஆஜராகும்போது, கருப்பு நிற கோட் மற்றும் அதன் மேல் கருப்பு நிற கவுன் அணிவது, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து பழக்கத்தில் உள்ளது.
நாடு சுதந்திம் அடைந்த பின், 1961ல் இயற்றப்பட்ட வழக்கறிஞர் சட்டத்திலும், இந்த கருப்பு நிற உடை அணிவது இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:
வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில், நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் கருப்பு நிற கோட் மற்றும் கவுன் அணிவது பல்வேறு உடல்நல கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, இந்த ஆடையை அணிந்து கொண்டு வழக்கறிஞர்கள் தங்கள் பணியை திறம்பட மேற்கொள்ளவும் சிரமப்படுகின்றனர்.
இதனால் அவர்களின் பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றன. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் அமலுக்கு வந்த இந்த ஆடை முறை, நம் நாட்டின் தட்பவெப்ப நிலையை கருத்தில் வைக்காமல் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, வழக்கறிஞர்கள் சட்டம் 1961ல் திருத்தம் மேற்கொண்டு, கோடை காலங்களில், வழக்கறிஞர்கள் கருப்பு கோட் மற்றும் கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.