போராட்டம் வேண்டாம்! டாக்டர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் தேவையான பாதுகாப்பு வழங்குவதாக உறுதி
போராட்டம் வேண்டாம்! டாக்டர்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் தேவையான பாதுகாப்பு வழங்குவதாக உறுதி
UPDATED : ஆக 18, 2024 04:56 PM
ADDED : ஆக 18, 2024 12:23 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களிடம், மீண்டும் பணிக்கு திரும்பும்படி மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டாக்டர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டும், குற்றவாளி மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், டில்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு போராட்டம் துவங்கியது. அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டும் டாக்டர்கள் பணியாற்றினர்.
புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை பணி புறக்கணிப்பு செய்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நாடு முழுதும் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் டில்லியில் நேற்று, மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்பநலத் துறை அமைச்சக அதிகாரிகளை, இந்திய மருத்துவ சங்கம், டில்லியில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் மருத்துவமனைகளின் டாக்டர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.
அப்போது, பணியிடங்களில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பினர். இதை பொறுமையாகக் கேட்ட அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை பாதுகாப்பதற்கான சட்டம், 26 மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு இருப்பதையும் குறிப்பிட்டனர்.
டெங்கு, மலேரியா அதிகரித்து வருவதை அடுத்து, மக்களின் நலன் கருதி, நாடு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என, டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளிடம் சுகாதார அமைச்சக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
மேலும், பணியிடத்தில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்க அமைச்சகம் முன்மொழிந்து உள்ளதாகவும், இக்குழுவிடம், மாநில அரசுகள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் பரிந்துரைகளை தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையே, நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும், கோல்கட்டாவில் பயிற்சி டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு ஏற்பாடு
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவமனையில் பணியாற்றுவோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சில நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது.
இதன்படி, மருத்துவமனையில் பணியாற்றும் பெண்களுக்கென தனி ஓய்வறை அமைக்கப்பட உள்ளது. மேலும், இரவு நேரத்தில் பணியாற்றும் பெண் டாக்டர்கள், நர்சுகளுக்கு உதவுதற்காக, பெண் தன்னார்வலர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணியின் போது ஆபத்து ஏற்பட்டால், அது குறித்து எச்சரிக்கை, மொபைல் ஆப் ஒன்றையும் பதிவிறக்கவும் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டாக்டர்கள் கோரிக்கை என்ன?
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த பயிற்சி டாக்டர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும். பயிற்சி டாக்டர்களுக்கான பணி நேரத்தை முறைப்படுத்த வேண்டும். டாக்டர்கள் ஓய்வெடுக்க உரிய வசதிகள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.