ADDED : ஜூன் 19, 2024 04:50 AM

பெங்களூரு ; பலாத்கார வழக்கில் சிறப்பு விசாரணை குழுவின் காவல் முடிந்த நிலையில், முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
ஹாசன் முன்னாள் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பலாத்கார வழக்கில், ஜெர்மனியில் இருந்து வந்த அவரை, மே 31ம் தேதி, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது.
அதன் பின், இரண்டு முறை அவரை தங்கள் கஸ்டடிக்கு எடுத்து, விசாரணை நடத்தினர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கூடுதல் விசாரணைக்காக, இம்மாதம் 12ம் தேதி, மூன்றாவது முறையாக தங்கள் கஸ்டடிக்கு எஸ்.ஐ.டி., அதிகாரிகள் எடுத்தனர். அவரிடம் தினமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆபாச வீடியோ வெளியானது தொடர்பாக துருவி, துருவி கேட்டுள்ளனர்.
தங்கஸ் கஸ்டடி நேற்றுடன் முடிந்த நிலையில், பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோஷ் கஜானன பட் முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
விசாரணையின்போது, ''ஏற்கனவே இரண்டு வழக்குகளில், மருத்துவ பரிசோதனையின்போது, 'அதை' காண்பித்துள்ளேன். மீண்டும் அதே பரிசோதனை நடத்தும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். 'அதை' காண்பிப்பதற்கு, மிகவும் சங்கடமாக இருப்பதால், விலக்கு அளிக்கும்படி வேண்டுகிறேன்,” என, பிரஜ்வல், நீதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
'தேவையான மருத்துவ பரிசோதனைகளை மட்டுமே செய்யுங்கள்' என, நீதிபதி கூறி உள்ளார்.
இதற்கிடையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் தாக்கல் செய்த மனு, வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், பிரஜ்வல் நேற்று மாலை மீண்டும் அடைக்கப்பட்டார்.
ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், பிரஜ்வல் மீது மொத்தம் மூன்று பலாத்கார வழக்குகள் பதிவாகின. இதில், இரண்டு வழக்குகளில் மீது எஸ்.ஐ.டி., விசாரணை முடிந்துள்ளது.
மூன்றாவது விசாரணைக்காக, இன்று மீண்டும் தங்கள் கஸ்டடிக்கு எடுப்பதற்கு, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

