'என் பொறுமையை சோதிக்காதே' பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
'என் பொறுமையை சோதிக்காதே' பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை
ADDED : மே 24, 2024 12:51 AM

பெங்களூரு,
'என் பொறுமையை சோதிக்க வேண்டாம். எங்கிருந்தாலும் உடனடியாக வந்து போலீசாரிடம் சரணடைந்து விடு' என ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, தன் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில், கடந்த மாதம், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டார்.
இந்நிலையில், 'எக்ஸ்' வலைதளத்தில் பிரஜ்வலுக்கு, தேவகவுடா எழுதிய கடிதம்:
என் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம். நீ எங்கு இருந்தாலும் உடனடியாக வந்து, போலீசாரிடம் சரணடைந்து விடு. சட்ட நடவடிக்கையை எதிர்கொள். எந்த நாட்டில் இருந்தாலும், சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும். இந்த விஷயத்தில் தயவு, தாட்சண்யம் பார்க்க மாட்டேன்.
அனைத்தையும் முடிவு செய்ய, சட்டம் உள்ளது. நானோ, என் குடும்பமோ விசாரணையில் தலையிட மாட்டோம் என, நான் அதிகாரிகளிடம் உறுதி அளித்திருக்கிறேன். ஒருவேளை நீ வராவிட்டால், குடும்பத்தின் கோபத்துக்கு ஆளாவாய். குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுவாய்.
மக்கள் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் அவமதிப்பாக பேசுகின்றனர். அனைத்தும் எனக்கு தெரியும். அவர்கள் பேசுவதை நிறுத்த, நான் முயற்சிக்க மாட்டேன். அவர்களை விமர்சிக்க மாட்டேன். வழக்கின் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்கு வரும் வரை, பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
சமீப நாட்களாக நடக்கும் அரசியல் சதிகள், குற்றச்சாட்டுகள் குறித்து, ஆராய நான் விரும்பவில்லை. இதை செய்தவர்கள், கடவுளுக்கு பதில் அளிக்க வேண்டும். நான் செய்ய வேண்டியது ஒன்றுதான். என் மீது மதிப்பு இருந்தால், பிரஜ்வல் எங்கிருந்தாலும், இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.