வீட்டில் முடங்குவேன் என்று நினைக்காதீர்! அமித் ஷா முன் எடியூரப்பா சூளுரை
வீட்டில் முடங்குவேன் என்று நினைக்காதீர்! அமித் ஷா முன் எடியூரப்பா சூளுரை
ADDED : ஏப் 03, 2024 07:34 AM

பெங்களூரு : ''நான் வீட்டில் முடங்கிவிடுவேன் என்று நினைக்க வேண்டாம். 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர்களை டில்லி அழைத்து சென்று, பிரதமர் நரேந்திர மோடி முன் நிறுத்தும் வரை, ஓயமாட்டேன்,'' என, முன்னாள் முதல்வர் எடியூரப்பா சூளுரைத்தார்.
பெங்களூரு அரண்மனை மைதானத்தில், பா.ஜ.,வின் வெற்றி சங்கல்பம் மாநாடு, நேற்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு, துக்ளக் ஆட்சி நடத்துகிறது. இனி கர்நாடகாவில் காங்கிரஸ் விளையாட்டு நடக்காது. அவர்களின் நாடகத்தை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.
எனக்கு, 82 வயது நடக்கிறது. இதனால் நான் வீட்டில் முடங்கிவிடுவேன் என்று நினைக்க வேண்டாம். வேட்புமனுத் தாக்கலுக்கு பின், மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, 28 தொகுதிகளிலும் பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்வேன்.
அனைத்து எம்.பி.,க்களையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமர் நரேந்திர மோடி முன் நிறுத்தும் வரை, ஓயமாட்டேன். கர்நாடகாவை மாதிரி மாநிலமாக மாற்றுவோம்.
தற்போதைய காங்., ஆட்சி திவாலாகிவிட்டது. அனைத்து பணமும் வாக்குறுதித் திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 1 கி.மீ., துாரத்துக்கு கூட சாலை போடவில்லை. கர்நாடகாவில் மட்டும் கொஞ்சம் மூச்சு விடும் காங்கிரசை நீக்குவோம்.
இவ்வாறு அவர்பேசினார்.

