போராட்டம் நடத்தி காலம் கடத்தாதீர் மேலவை தலைவர் ஹொரட்டி அறிவுரை
போராட்டம் நடத்தி காலம் கடத்தாதீர் மேலவை தலைவர் ஹொரட்டி அறிவுரை
ADDED : டிச 09, 2024 06:50 AM

பெங்களூரு: ''குளிர்கால சட்டசபை கூட்டத்தில் எந்த விஷயத்தையாவது வைத்து கொண்டு போராட்டம் நடத்தி காலம் கடத்தாமல் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிப்பதில், கவனம் செலுத்துங்கள்,'' என மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, பா.ஜ.,வினருக்கு அறிவுறுத்தினார்.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்கால சட்டசபை கூட்டம் இன்று துவங்குகிறது. அரசுக்கு எதிரான பல அஸ்திரங்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளன. வால்மீகி மேம்பாட்டு ஆணையம், முடா முறைகேடு, வக்பு வாரிய நோட்டீஸ் என, பல விஷயங்களை முன் வைத்து, ஆளுங்கட்சியான காங்கிரசை நெருக்கடியில் சிக்க வைக்க, எதிர்க்கட்சி பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
சட்டசபையில் போராட்டம் நடத்தவுள்ளது. இந்நிலையில் போராட்டம் நடத்தி கூட்ட நேரத்தை வீணாக்க கூடாது என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, பா.ஜ.,வினரிடம் அறிவுறுத்தினார்.
இது குறித்து, ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எந்த விஷயத்தை முன் வைத்தும், தர்ணா நடத்தி காலத்தை வீணாக்க கூடாது. முக்கியமான விஷயங்களை பற்றி விவாதிக்க வேண்டும். கூட்டம் நல்ல முறையில் நடக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பெலகாவியில் நடக்கும் கூட்டத்தொடர், அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பது, எங்களின் விருப்பம்.
வட மாவட்டங்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, 20 கோடி ரூபாய் செலவில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இரண்டு வாரங்களில் நான்கு நாட்கள், வட மாவட்டங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்கப்படும்.
மஹதாயி, துங்கபத்ரா, கிருஷ்ணா உட்பட மற்ற நீர்ப்பாசன திட்டங்கள், பெங்களூரை தவிர மற்ற மாவட்டங்களின் பிரச்னைகளை பற்றி, விவாதிக்க வேண்டும். மேல்சபையின் அனைத்து எம்.எல்.சி.,க்களும், விவாதங்களில் பங்கேற்க வேண்டும். நாளை (இன்று) ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். எந்த விஷயத்தை வைத்தும், போராட்டம் நடத்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.