டெங்குவை கட்டுப்படுத்த வீடு வீடாக ஆய்வு; அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
டெங்குவை கட்டுப்படுத்த வீடு வீடாக ஆய்வு; அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
ADDED : ஜூன் 27, 2024 06:53 AM

பெங்களூரு: 'டெங்குவை கட்டுப்படுத்த வீடு வீடாக ஆய்வு செய்யப்படும். டெங்கு பரப்பும் கொசுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து, அழிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
பெங்களூரில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று அனைத்து மண்டல அதிகாரிகளுடன், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
பெங்களூரின் எட்டு மண்டலங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், ஆஷா சுகாதார பணியாளர்கள் உட்பட 1,000 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளுது. இவர்கள், ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிப்பர். டெங்கு பரப்பும் கொசுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அழிப்பர். அத்துடன் பொது மக்களிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வீட்டில் உள்ள பொருட்களில், நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியிருந்தால், அதை அகற்ற வேண்டும். நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பெங்களூரில் 1,230 டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.
நகரில் மழை பெய்து வருவதால், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநில அரசு அளவில் மட்டுமல்ல, மாநகராட்சி அளவிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காய்ச்சல் கண்டறியப்பட்டால், நகரின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்ட பின், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட 28 லட்சம் வீடுகளில், 14 லட்சம் வீடுகள் தாழ்வான பகுதிகளில் உள்ளது.
இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை சென்று, கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த விழிப்புணர்வில், நர்சிங் கல்லுாரி மாணவர்கள், என்.எஸ்.எஸ்., தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவர்.
வீடுகள் மட்டுமின்றி, தோட்டக்கலை துறை, வனத்துறை, திடக்கழிவு உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைந்து, தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து, தேங்காமல் நடவடிக்கை எடுப்பர். மஹாதேவபுரா, தெற்கு, கிழக்கு மண்டலங்களில் அதிக டெங்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.
27_DMR_0014
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து மண்டல அதிகாரிகளுடன், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் ஆலோசனை நடத்தினார். இடம்: மாநகராட்சி தலைமை அலுவலகம், பெங்களூரு.