UPDATED : ஏப் 21, 2024 03:34 AM
ADDED : ஏப் 21, 2024 12:40 AM

புதுடில்லி,மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான டி.டி., எனப்படும் துார்தர்ஷனின் செய்திச்சேனல், தன், லட்சினை எனப்படும், 'லோகோ'வை, காவி நிறத்தில் மாற்றியதை, பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் டி.டி., நியூஸ் சேனல், தன் நீல நிற லோகோவை, காவி நிறத்திற்கு மாற்றியது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட பதிவில், 'எங்கள் நிறுவனத்தின் தரம் எப்போதும் மாறாது; இப்போது ஒரு புதிய அவதாரத்தில் தோன்றியுள்ளோம்; முன் எப்போதும் இல்லாத செய்தி பயணத்திற்கு தயாராகுங்கள்' என, குறிப்பிட்டு புதிய லோகோவையும் வெளியிட்டது.
லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த நடவடிக்கை மேற்கொண்டதற்கு காங்கிரஸ், திரிணமுல் காங்., உட்பட எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து சமூக வலைதளத்தில் திரிணமுல் காங்கிரசின் ராஜ்யசபா உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜவர் சிர்கார் வெளியிட்ட வீடியோ பதிவில், 'தேசிய செய்திகளை ஒளிபரப்பும் டி.டி., அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லோகோவை, காவி நிறத்திற்கு மாற்றி உள்ளது, கண்டிக்கத்தக்கது' என, தெரிவித்துள்ளார்.
புதிய லோகோவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரசார் பாரதியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் திவேதி கூறுகையில், “எங்கள் நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
''தொழில்நுட்ப ரீதியாகவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், பளீச்சென தெரியும் வகையில் காவி நிறத்தில் புதிய லோகோவை வடிவமைத்துள்ளோம்,” என்றார்.

