'டபுள் டெக்கர்' பஸ் இயக்கம் தேர்தலால் முட்டுக்கட்டை
'டபுள் டெக்கர்' பஸ் இயக்கம் தேர்தலால் முட்டுக்கட்டை
ADDED : ஏப் 09, 2024 06:36 AM

பெங்களூரு: 'டபுள் டெக்கர்' பஸ்சில் பயணம் செய்ய பெங்களூரு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
பெங்களூரில் 35 ஆண்டுகளுக்கு முன்பு, டபுள் டெக்கர் பஸ்களை பி.எம்.டி.சி., இயக்கியது. காலப்போக்கில், இந்த பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. இன்றைய தலைமுறையினருக்காக இந்த பஸ்களை மீண்டும் இயக்க, பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு பின், டபுள் டெக்கர் பஸ்களில் பயணம் செய்ய பொதுமக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் பஸ்களை வாங்க, லோக்சபா தேர்தல் முட்டுக்கட்டையாக வந்துள்ளது.
இதுதொடர்பாக, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் டபுள் டெக்கர் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக 10 எலக்ட்ரிக் டபுள் டெக்கர் பஸ்களை வாங்க, டெண்டர் கோரப்பட்டது. மார்ச் 14ல் அழைக்கப்பட்ட முதல் டெண்டரில், யாரும் பங்கேற்கவில்லை. டெண்டரில் பங்கேற்க ஏப்ரல் 10 கடைசி நாள்.
இதற்கிடையில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே டெண்டரை முடிவு செய்ய முடியவில்லை. நடத்தை விதிகள் நீங்கிய பின், பஸ்களை வாங்குவதற்கான, ஏற்பாடுகள் நடக்கும்.
மெஜஸ்டிக்கில் இருந்து சிவாஜி நகர்; சிவாஜி நகரில் இருந்து கே.ஆர்.மார்க்கெட்; மெஜஸ்டிக்கில் இருந்து அத்திபள்ளி ஆகிய வழித்தடங்களில் டபுள் டெக்கர் பஸ்களை இயக்க ஆலோசிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

