'சர்ஜிகல் ஸ்டிரைக்' குறித்து சந்தேகம்: ரேவந்த் ரெட்டிக்கு கடும் எதிர்ப்பு
'சர்ஜிகல் ஸ்டிரைக்' குறித்து சந்தேகம்: ரேவந்த் ரெட்டிக்கு கடும் எதிர்ப்பு
UPDATED : மே 12, 2024 11:53 AM
ADDED : மே 12, 2024 12:17 AM

ஹைதராபாத் :லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும், மற்றும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ., குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி கடும் எதிர்ப்பை தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.
போலீஸ் படை
'இண்டியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், ஜம்மு -- காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தானாகவே, நம் நாட்டுடன் இணையும் என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், 'பாகிஸ்தான் கைகளில் வளையல் அணிந்திருக்கவில்லை. அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அது நம் தலையில்தான் விழும்' என, அவர் கூறியிருந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யரும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இதேபோன்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரசைச் சேர்ந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சர்ஜிகல் ஸ்டிரைக் நடந்ததா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், 2019 பிப்ரவரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் கொல்லப்பட்டனர்.
மோசமான அரசியல்
பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். உங்களுடைய உளவுத்துறை என்ன செய்தது. இந்த தாக்குதல், உளவுத் துறையின் தோல்வியில்லையா. புல்வாமா தாக்குதலையும் அரசியல் செய்ய நீங்கள் பயன்படுத்தவில்லையா.
புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது? அதை தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாக கூறுகின்றனர்.
உண்மையில் அதுபோன்ற ஒன்று நடந்ததா என்பது சந்தேகமாக உள்ளது. அது குறித்து எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா பா.ஜ., மூத்த தலைவர் பண்டி சஞ்சய் குமார் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க காங்கிரஸ் தலைவர்கள் ஏன் முயற்சிக்கின்றனர்.
தெலுங்கானாவில் பல இடங்களில், காங்கிரஸ் ஆட்சியின்போது குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. அப்போது உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அவர்கள் பேசவில்லை. போகிற போக்கை பார்த்தால், அதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களோ, வன்முறைகளோ நடக்கவில்லை என்று சொன்னாலும் சொல்வர்.
பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்குவதற்காக, நம் ராணுவத்தின் திறன்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புகின்றனர். இவர்கள் மிகவும் மோசமான அரசியல் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.