எஸ்.எஸ்.எல்.சி., படித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் பாகல்கோட் போலீசாரிடம் வசமாக சிக்கும் போலிகள்
எஸ்.எஸ்.எல்.சி., படித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர் பாகல்கோட் போலீசாரிடம் வசமாக சிக்கும் போலிகள்
ADDED : ஜூலை 07, 2024 03:12 AM
பாகல்கோட்: எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., - பி.ஏ., - பி.காம்., உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்துவிட்டு, 'டாக்டர்' என்ற பெயரில் போலி கிளினிக் நடத்தி வருவோருக்கு 'காப்பு' போட, போலீசார் தயாராகி வருகின்றனர்.
கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., - பி.ஏ., - பி.காம்., ஐ.டி.ஐ., உட்பட பல்வேறு படிப்புகளை படித்துவிட்டு, 'டாக்டர்' என கூறிக் கொண்டு, கிளினிக் நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு, பெண் குழந்தை விற்பனையில், போலி டாக்டர் ஒருவர் சிக்கினார். அவரிடம் விசாரித்தபோது, 'அவர் டாக்டரே இல்லை' என்பது தெரிய வந்தது.
இதனால் உஷாரான பாகல்கோட் மாவட்ட போலீசார், இத்தகைய போலி டாக்டர்களை கண்டுபிடிக்க முடிவு செய்தனர்.
இதன்படி, மாவட்டத்தில் நடந்த சிசுக்கொலைகள் தொடர்பான வழக்குகளை ஆராய்ந்தனர். இதில், கிராமப்புறங்கள், மாவட்ட தலைமையகம், நகரங்களில் போலி டாக்டர்கள் இருப்பது தெரிய வந்தது.
அவர்களின் பெயர், கிளினிக் பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட ஒவ்வொரு தகவல் அடங்கிய விரிவான அறிக்கையை தயாரித்தனர்.
இந்த அறிக்கையை, மாவட்ட கலெக்டர், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அலுவலர், மாவட்ட சுகாதார அதிகாரி ஆகியோரிடம் சமர்ப்பித்தனர்.
மாவட்டத்தில், சவுல்கி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 60 பேரும்; பெலகி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 39 பேரும்; முத்தோல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 39 பேரும்;
கலடகி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 29 பேரும்; பி.ஏ.எம்.எஸ்., படித்த 50க்கும் மேற்பட்டோர், ஆயுர்வேத சிகிச்சைக்கு பதிலாக, அலோபதி சிகிச்சை அளித்து வருவது தெரியவந்துள்ளது.
விரைவில் இவர்களை கைது செய்து, கிளினிக்கை மூட போலீசார் தயாராகி வருகின்றனர்.