அரசியல் போட்டிக்கு நீதிமன்றத்தை இழுப்பதா: ரேவந்த்துக்கு குட்டு
அரசியல் போட்டிக்கு நீதிமன்றத்தை இழுப்பதா: ரேவந்த்துக்கு குட்டு
ADDED : ஆக 30, 2024 02:31 AM
புதுடில்லி: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிரான ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கை, போபாலுக்கு மாற்றும் கோரிக்கை மீதான முடிவை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையே, அவர் கூறிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தெலுங்கானாவில் கடந்த, 2015ல் சட்டமேலவைக்கு தேர்தல் நடந்தது. அப்போது, பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார்.
எதிர்க்கட்சியாக இருந்த தெலுங்கு தேசத்தின் எம்.எல்.ஏ.,வாக ரேவந்த் ரெட்டி இருந்தார்.
எதிர்ப்பு
சட்ட மேலவை தேர்தலில், தெலுங்கு தேசம் வேட்பாளர் வெற்றிக்காக, நியமன எம்.எல்.ஏ.,வான எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு, 50 லட்சம் ரூபாய் லஞ்சம் தர முயன்றதாக, ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் மீது, மாநில லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.
கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2017ல் தெலுங்கு தேசத்தில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
இந்த விவகாரத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று ரேவந்த் ரெட்டி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021 ஜூன் 1ல் தள்ளுபடி செய்தது.
தற்போது, மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளதால், வழக்கை மத்திய பிரதேசத்தின் போபாலுக்கு மாற்றக் கோரி, பாரத் ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ., குண்டகாண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இதை வழக்குகள், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
காலையில் நடந்த விசாரணையின்போது, 'வழக்கை போபால் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்' என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு தெலுங்கானா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதியத்துக்குப் பின், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சமரசம்
அப்போது அமர்வு கூறியதாவது:
டில்லி மதுபான ஊழல் தொடர்பான வழக்கில், பாரத் ராஷ்டிர சமிதி மேலவை உறுப்பினர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியது.
இது குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
'பா.ஜ., மற்றும் பாரத் ராஷ்டிர சமிதிக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படியே, கவிதாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது' என, அவர் கூறியிருந்தார்.
நாங்கள் அரசியல் கட்சிகளின் ஆலோசனையை கேட்டா நடந்து கொள்கிறோம்? உங்களுக்கு இடையே அரசியல் போட்டி இருக்கலாம்; அதில் நீதிமன்றத்தை ஏன் இழுக்கிறீர்கள்? அதுவும் அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கும் முதல்வர் இதுபோன்று கருத்து கூறலாமா?
இது மக்களிடையே நீதிமன்றம் தொடர்பாக தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தி விடாதா?
விமர்சனம்
நாங்கள் எந்த வழக்கையும் அரசியல் அடிப்படையில் பார்ப்பதில்லை. நீதி மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே பார்க்கிறோம்.
நாங்கள் சட்டசபைகளை மதிக்கிறோம். அதுபோல, அரசியல்வாதிகளும் நீதிமன்றங்களை மதிக்க வேண்டும். யார் என்ன விமர்சனம் செய்தாலும், எங்களுடைய மனசாட்சியின்படி, சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவோம்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை, செப்., 2ம் தேதிக்கு அமர்வு ஒத்தி வைத்துள்ளது.