ADDED : ஆக 06, 2024 12:32 AM
சிவில் லைன்ஸ்:
மது போதையில் விபத்து ஏற்படுத்திய டானிக்ஸ் அதிகாரியை பணியிடைநீக்கம் செய்ய டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.
டானிக்ஸ் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ரமேஷ் சந்தர் மீனா. கடந்த 4ம் தேதி குடிபோதையில் தன் காரை ரமேஷ் சந்தர் மீனா ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர், ஒரு பைக்கை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் பைக் காரில் சிக்கி இரண்டு கிலோமீட்டர் துாரம் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
பைக் ஓட்டி வந்தவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் ரமேஷ் சந்தர் மீனாவுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியதில், அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்ய துணை நிலை கவர்னர் அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.