ADDED : பிப் 26, 2025 11:12 PM

கொத்தனுார்: பெங்களூரு கே.ஆர்.புரத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி, 35. இவர், நேற்று முன்தினம் கொத்தனுார் பிலிஷிவலே பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து கே.ஆர்.புரம் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்து இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒருவர், நாகலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்தார். மது குடிக்க பணம் தரும்படி கேட்டார். 'நீங்கள் யார் என்றே தெரியாது. நான் ஏன் பணம் தர வேண்டும்' என்று அந்த நபரிடம், நாகலட்சுமி கோபமாக கூறினார். இதனால் அந்த நபர் அங்கிருந்து சென்றார்.
சிறிது நேரத்தில் மீண்டும் திரும்பி வந்தார். கையில் இருந்த கத்தியால் நாகலட்சுமியின் இடது காதில் இருந்து கன்னம் வரை கீறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணியர், அந்த நபரை பிடித்து கொத்தனுார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் கைது செய்யப்பட்டார். நாகலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் ஆனந்த், 52 என்பது தெரிந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து உள்ளார்.
பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நிற்பவர்களிடம் சென்று, ஏதாவது காரணம் கூறி பணம் வாங்கி மது குடித்து வந்தது தெரிந்தது.