ADDED : ஏப் 04, 2024 11:25 PM
புதுடில்லி:அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சிறைத் துறை விளக்கம் அளித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, 2021 - 22ம் ஆண்டுக்கான புதிய மதுபானக் கொள்கையை வகுத்தது. இதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ., விசாரிக்கிறது.
சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கிறது. இது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
விசாரணைக்குப் பிறகு திஹார் சிறையில் அறை எண்: 2ல் அவர் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தன் வக்கீலை சந்திக்கச் செல்லும்போதோ குடும்பத்தினரை சந்திக்கச் செல்லும்போதோ தொலைபேசியை உபயோகிக்கச் செல்லும்போதோ அவர் தாக்கப்படாமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதுபோன்ற நேரங்களில் மற்ற கைதிகளிடம் இருந்து அவர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார். அவர் விருப்பம் இன்றி எந்த ஒரு கைதியும் அவரை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
முதல்வர் அறைக்கு வெளியே இரண்டு வார்டன்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவரது அறைக்குச் செல்லும் வழியில் உள்ள சிறு தோட்டத்தில் மேலும் இருவர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது. இவர்கள் அனைவரும் சுழற்சி அடிப்படையில் பணியில் இருப்பர்.
முதல்வருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் தனிக்குழு ஒன்று இரண்டாவது சிறையில் எப்போதும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறையில் இருந்தபடியே முதல்வர் பணியைத் தொடர்கிறார் என்ற போதிலும் காணொலிகாட்சியுடன் கூடிய ஆலோசனை அரங்கு, கணினி, இணையவசதி, தொலைபேசி வசதி உள்ளிட்ட எந்த ஒரு வசதியும் செய்து தரும்படி இதுவரை எந்தவித கோரிக்கையும் சிறை நிர்வாகத்துக்கு வரவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

