டாக்டர் அலட்சியத்தால் குழந்தை பலி உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
டாக்டர் அலட்சியத்தால் குழந்தை பலி உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 06, 2024 06:18 AM

தாவணகெரே: அறுவை சிகிச்சையின் போது, குழந்தையின் ஆசனவாயில் தவறுதலாக பிளேடு பட்டதால், எட்டு நாள் சிகிச்சை அளித்தும் குழந்தை உயிரிழந்தது.
தாவணகெரேயின் கொண்டஜ்ஜி சாலை அருகில் உள்ள விநாயக் நகரை சேர்ந்தவர்கள் அர்ஜுன் - அம்ரிதா தம்பதி. நிறைமாத கர்ப்பிணியான அம்ரிதா, ஜூன் 26ம் தேதி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 27ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது குழந்தையை வெளியே எடுப்பதற்கு முன், அதன் ஆசனவாயிலில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் பிளேடு பட்டதால், ரத்தப்போக்கு ஏற்பட்டது.
பெண் குழந்தையை வெளியே எடுத்த பின், பாபுஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தைக்கு, தொடர்ந்து எட்டு நாட்கள் சிகிச்சை அளித்தும், நேற்று காலை, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.
'டாக்டரின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்தது. சம்பந்தப்பட்ட டாக்டரை பணிநீக்கம் செய்ய வேண்டும்' என்று கூறி, மருத்துவமனை முன், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சுகாதார துறை அதிகாரி டாக்டர் நாகேந்திரப்பா கூறுகையில், ''இச்சம்பவம் குறித்து டாக்டர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
''அவர்கள் விசாரணை நடத்தி, மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிப்பர். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
போராட்டம் நடத்திய உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். இடம்: தாவணகெரே.