ADDED : பிப் 28, 2025 02:13 AM

புதுடில்லி, பிப். 28-
'செபி' எனப்படும் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக, நிதி மற்றும் வருவாய் செயலர் துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
செபி தலைவர் மாதவி புரி புச்சின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், செபியின் 11வது தலைவராக, நிதி மற்றும் வருவாய் செயலர் துஹின் காந்தா பாண்டேவை நியமித்து, மத்திய அரசு நேற்றிரவு உத்தரவிட்டது.
ஒடிசாவைச் சேர்ந்த 1987 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், பதவி ஏற்கும் நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் செபி தலைவராக பதவி வகிப்பார்.
அதானி குழுமத்தின் சட்ட விரோத முதலீட்டு நிறுவனங்களில், மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்ததாக கடந்தாண்டு குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் மாதவி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.

