தங்கச்சுரங்க தொழிலாளர் பிரச்னை; அமைச்சருக்கு துரை வைகோ கடிதம்
தங்கச்சுரங்க தொழிலாளர் பிரச்னை; அமைச்சருக்கு துரை வைகோ கடிதம்
ADDED : ஆக 30, 2024 09:53 PM

தங்கவயல் : 'தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டும்' என, மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிருஷ்ணா ரெட்டிக்கு திருச்சி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
தங்கச்சுரங்க தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், தங்கச் சுரங்க நிறுவனம் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.
கடந்த 2001ல் மூடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள், இன்னும் இறுதி செட்டில்மென்ட் தொகை கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.
தமிழர்கள் நிறைந்த தங்கச்சுரங்க தொழிலாளர்களின் நிலை அறிந்த தமிழகத்தின் திருச்சி தொகுதி ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிருஷ்ணா ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தங்கச் சுரங்கம் மூடப்பட்டு 3,500 தொழிலாளர்களுக்கு இறுதித் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள தொகையை வழங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் அவர்களுக்கு வட்டியுடன் நிலுவைத் தொகை வழங்க உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால், தங்கச் சுரங்க நிறுவனம் மேல் முறையீடு சென்றுள்ளது. எனவே, மேலும் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் சுமுகமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.