ADDED : செப் 02, 2024 10:35 PM
மைசூரு: அமாவாசை என்பதால் நேற்று தசரா யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
மைசூரு தசராவில் பங்கேற்க, முதல்கட்டமாக அபிமன்யு தலைமையில் ஒன்பது யானைகள் நகருக்கு வந்துள்ளன. தினமும் அரண்மனையில் இருந்து பன்னிமண்டபம் வரை நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, 520 கிலோ எடை உள்ள மணல் மூட்டையுடன் அபிமன்யு யானைக்கு நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது. அமாவாசை நாளான நேற்று, யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக யானைகளின் பாகன்கள் கூறியதாவது:
அமாவாசை, பவுர்ணமி நாட்களில் யானைகளை வெளியே அழைத்துச் செல்ல மாட்டோம். இது மன்னர் காலத்தில் இருந்து அனுசரித்து வரும் முறை. இந்நாட்களில் யானைகளுக்கு மதம் பிடிக்கும் சம்பவங்கள் அல்லது போகும் வழியில் மனம் மாறி குறுக்காக நுழைந்து அட்டகாசம் செய்யும் வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, அமாவாசை நாட்களில் யானை முகாம்களிலும் சரி, இம்மாதிரி நிகழ்ச்சிகளிலும் சரி, கும்கி யானைகளை வெளியே விடுவதில்லை. அவைகள் தங்கி இருக்கும் இடங்களிலேயே கட்டிப் போட்டு விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓய்வில் இருந்த யானைகள் குளிப்பாட்டப்பட்டன. இதனால் யானைகள் குதுாகலமடைந்தன. பின், அவற்றுக்கு உணவு வழங்கப்பட்டது.