தசரா பாகன்கள், உதவியாளர்கள் பிள்ளைகளுக்கு பள்ளி துவக்கம்
தசரா பாகன்கள், உதவியாளர்கள் பிள்ளைகளுக்கு பள்ளி துவக்கம்
ADDED : செப் 10, 2024 06:54 AM

மைசூரு: தசரா யானைகளுடன் வந்துள்ள யானை பாகன்கள், உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக, மைசூரு அரண்மனை வளாகத்தில் தற்காலிக பள்ளி திறக்கப்பட்டுள்ளது.
மைசூரு தசரா திருவிழாவில் பங்கேற்க, மாநிலத்தின் வெவ்வேறு யானைகள் முகாம்களில் இருந்து, 14 யானைகள் மைசூருக்கு வந்துள்ளன. அரண்மனை வளாகத்தில் முகாமிட்டுள்ளன.
யானைகளுடன் பாகன்கள், உதவியாளர்களும் வந்துள்ளனர். தங்கள் பிள்ளைகளையும் உடன் அழைத்து வந்துள்ளனர். இவர்கள் இரண்டரை மாதம் இங்கிருப்பர். தசரா திருவிழா முடிந்த பின், தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்பிச் செல்வர்.
பிள்ளைகளின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால், அரண்மனை வளாகத்தில் வனத்துறை அதிகாரிகள், பள்ளி திறந்துள்ளனர். இங்கு அவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்பு சவாரியில் பங்கேற்க, யானைகள் தயாராகின்றன. இவற்றை பராமரிக்க பாகன்கள், உதவியாளர்கள் உடன் வந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி, குடும்பத்தினரும் வருகின்றனர். இவர்களின் பிள்ளைகளின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதால், தற்காலிக பள்ளி அமைத்து கல்வி கற்றுத்தரப்படுகிறது.
பெற்றோர், யானைகளை பராமரிப்பதில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பிள்ளைகள், மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி பள்ளியில் பாடம் கற்கின்றனர். இதற்கு முன்பு தசராவுக்கு வரும் பாகன்கள், உதவியாளர்களின் பிள்ளைகள் ஒன்றரை, இரண்டு மாதம் மைசூரில் இருப்பர். அதற்குள் அவர்கள் கற்ற பாடங்களை மறந்துவிடுவர். இதை மனதில் கொண்டு, கடந்த 17 ஆண்டுகளாகவே டென்ட் அமைத்து, பாடம் கற்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதற்கு முன்பு டென்ட் மூலம் பள்ளி அமைக்கப்பட்டது என்றாலும், இரண்டு ஆண்டுகளாக அரண்மனையின் ஜெய மார்த்தாண்ட நுழைவு வாயில் அருகில் உள்ள கட்டடத்தில், தற்காலிக பள்ளி செயல்படுகிறது. ஆனால் மக்கள் இப்போதும் டென்ட் பள்ளி என்றே அழைக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.