தலைநகரில் புழுதி புயல்: மரங்கள் சரிந்தன; 2 பேர் பலி
தலைநகரில் புழுதி புயல்: மரங்கள் சரிந்தன; 2 பேர் பலி
ADDED : மே 11, 2024 09:21 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் வீசிய புழுதிப் புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன.
சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுடில்லி மற்றும் புறநகரில் நேற்று முன் தினம் இரவு புழுதிப் புயல் வீசியது. பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் பெயர்ந்து விழுந்தன. இதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மேற்கு டில்லி விகாஸ்புரியில், ஜனக்புரி மேம்பாலம் அருகே மரத்தின் கிளை முறிந்து பைக்கில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். அதே இடத்தில் ஒரு காரும் சேதமடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.
இரவு 11:00 மணிக்கு கே.என். கட்ஜு மார்க் ஐ.பி., பிளாக் அருகே ஒரு தொழிலாளி மீது மரம் சரிந்தது. மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். டில்லி மற்றும் புறநகரில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. சில இடங்களில் கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் இடிந்தன.
மோசமான வானிலை காரணமாக டில்லி விமான நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
வெப்பம்
நேற்று முன் தினம் -இரவில் புழுதிப் புயல் மற்றும் லேசான மழை பெய்த நிலையில், நேற்று வெப்பநிலை குறைந்த பட்சமாக 24.9 மற்றும் அதிகபட்சமாக 39 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் டில்லியில் 0.4 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 62 சதவீதமாக இருந்தது. காற்றின் தரக் குறியீடு காலை 9:00 மணிக்கு 207 ஆக இருந்தது.
இது மோசமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.