ADDED : மார் 12, 2025 11:44 PM
குடகு : குடகு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று காலை நில நடுக்கம் உணரப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. மக்கள் கிலியடைந்தனர்.
குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவின் மதே கிராம பஞ்சாயத்து மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், நேற்று காலை 10:50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பொன்னங்கேரி, பெட்டத்துார் உட்பட, சில இடங்களில் மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்தனர்.
பூமிக்குள் இருந்து விசித்திரமான சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளில் பொருட்கள் கீழே விழுந்தன. மக்கள் அலறியடித்து, வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
இதுதொடர்பாக, கர்நாடக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கை:
மடிகேரியின், மதேநாடு கிராம பஞ்சாயத்து அருகில், பூமியில் இருந்து 5 கி.மீ., ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் இது 1.6 அளவாக பதிவாகியுள்ளது. நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி, மடிகேரி நகரில் இருந்து, 4 கி.மீ., ஹாரங்கி அணையில் இருந்து 23.8 கி.மீ., துாரத்தில் இருந்தது.
நேற்று ஏற்பட்டது, லேசான நில நடுக்கம்தான். எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. எனவே மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் கடந்தாண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. 2018ம் ஆண்டிலும் நில நடுக்கம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.