ADDED : ஏப் 05, 2024 11:22 PM

ஷிவமொகா: “கர்நாடகாவில் பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்ய தங்கள் குடும்பத்தினரால் மட்டுமே முடியும் என்ற மாயையை உருவாக்கியுள்ளனர்,” என, தீர்த்தஹள்ளியில் நேற்று பிரசாரத்தை துவக்கிய முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, எடியூரப்பா குடும்பத்தை விமர்சித்தார்.
ஹாவேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, தன் மகன் காந்தேஷுக்கு சீட் தரவில்லை என்பதால் பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.
இதற்கு பழிவாங்க, ஷிவமொகா தொகுதியில் போட்டியிடும் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திராவை தோற்கடிக்க, அவர் திட்டமிட்டுள்ளார். எனவே சுயேச்சை வேட்பாளராக களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மொபைல் போனில் பேசியும் ஈஸ்வரப்பா சமாதானமடையவில்லை. டில்லிக்கு ஈஸ்வரப்பாவை அழைத்த அமித்ஷா, திடீரென மனம் மாறி, அவரை சந்திக்க மறுத்து விட்டார்.
இது, ஈஸ்வரப்பாவை மேலும் உசுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தனது முடிவில் இருந்து பின்வாங்காத ஈஸ்வரப்பா, ஷிவமொகாவின் தீர்த்தஹள்ளியில் அம்புதீர்த்தா கோவில், ராமேஸ்வரம் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு செய்து, தன் பிரசாரத்தைத் துவக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் காங்கிரஸ் கட்சி எப்படி ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோ, அதுபோன்று கர்நாடகாவில் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் பா.ஜ., உள்ளது. மாநிலத்தில் உள்ள வாரிசு அரசியலை தடுக்கும் திறமை, பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு உள்ளது. ஆனால், அவர்களிடம் அந்த குடும்பத்தினர் ஏதோ மாயை ஏற்படுத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் எடியூரப்பா மட்டுமே லிங்காயத் தலைவர், விவசாய தலைவர், மக்கள் தலைவர் என்ற மாயையை உருவாக்கியுள்ளனர்.
அவர் குடும்பத்தைத் தவிர, வேறு யாரும் கர்நாடகாவில் பா.ஜ.,வை வெற்றி பெற செய்ய முடியாது என்ற மாயையை உருவாக்கியதால் தான், கர்நாடகாவுக்கு இத்தகைய சூழ்நிலை நிலவுகிறது.
தேர்தலில் நான் வெற்றி பெற்று எம்.பி.,யானால், எதிர்க்கட்சி இருக்கையில் அமர மாட்டேன். ஷிவமொகாவில் ராகவேந்திரா மற்றும் கீதா சிவராஜ்குமார் ஆகிய இரண்டு பேரையும் தோற்கடிப்பேன்.
இவ்வாறு அவர்கூறினார்.

