ஈஸ்வரப்பா டம்மி வேட்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் குற்றச்சாட்டு
ஈஸ்வரப்பா டம்மி வேட்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் குற்றச்சாட்டு
ADDED : மார் 25, 2024 06:30 AM

ஷிவமொகா; ''முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவுடன், பா.ஜ., உள் ஒப்பந்தம் செய்து கொண்டு டம்மி வேட்பாளரை களமிறக்குகிறது,'' என மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆயனுார் மஞ்சுநாத் குற்றம்சாட்டினார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
ஷிவமொகா தொகுதி மக்கள், காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமாரை வெற்றி பெற வைப்பர். இந்த தொகுதியில் ராகவேந்திராவை வெற்றி பெற வைக்க, ஈஸ்வரப்பாவுடன் பா.ஜ., உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தேர்தலுக்கு பின் ஈஸ்வரப்பா கவர்னர் ஆவார். அவரது மகன் காந்தேஷுக்கு எம்.எல்.சி., பதவி கிடைக்கும்.
சுயேச்சையாக போட்டியிடும் தைரியம், ஈஸ்வரப்பாவுக்கு இல்லை. ஆனால் பிடிவாதம் பிடிக்கிறார். இதற்கு உள் ஒப்பந்தமே காரணம். டம்மி வேட்பாளராக போட்டியிடுகிறார். எடியூரப்பாவை வெறுக்கும் சிலர், பா.ஜ.,வில் உள்ளனர். இவர்கள் எடியூரப்பாவையும், விஜயேந்திராவையும் குறி வைத்துள்ளனர். விஜயேந்திரா மாநில தலைவராக இருக்க கூடாது என்பதால், ஈஸ்வரப்பாவை ஏவி விட்டுள்ளனர்.
பா.ஜ.,வின் எந்த தலைவரும், ஈஸ்வரப்பாவுக்கு எதிராக பேசவில்லை. அரசியல் சதுரங்க காயாக இவரை பயன்படுத்துகின்றனர். இவர் மீது 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு உள்ளது. வருமான வரித்துறை, அமலாக்க துறை பயம் ஈஸ்வரப்பாவை வாட்டுகிறது. எனவே நெருக்கடிக்கு பணிந்து, சுயேச்சையாக போட்டியிட முன் வந்துள்ளார்.
ஷிவமொகா மக்கள் புத்திசாலிகள். பா.ஜ.,வின் ராகவேந்திரா மற்றும் ஈஸ்வரப்பாவை நிராகரிப்பர். பங்காரப்பாவும், அவரது குடும்பத்தினரும் உள் ஒப்பந்தம் செய்து கொண்டதில்லை. கீதா சிவராஜ்குமாரை மக்கள் வெற்றி பெற வைப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

