சாப்பிடுவதை ஏன் காட்ட வேண்டும்?: தேஜஸ்வியை சாடிய ராஜ்நாத் சிங்
சாப்பிடுவதை ஏன் காட்ட வேண்டும்?: தேஜஸ்வியை சாடிய ராஜ்நாத் சிங்
ADDED : ஏப் 14, 2024 05:21 PM

பாட்னா: 'மீன், யானை, குதிரை என எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். அதை ஏன் காட்ட வேண்டும்?' என தேஜஸ்வி யாதவை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாடியுள்ளார்.
பீஹார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த ஆண்டு வெளிநாட்டில் நடைபெறவிருக்கும் விழாக்களுக்கான அழைப்புகள் வருகிறது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது தவிர்க்க முடியாதது என்று முழு உலகமும் நம்புகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் மோடி பிரதமர் ஆகுவார்.
மீன், யானை, குதிரை
நவராத்திரியின் போது மீன் உண்ணும் வீடியோ காட்சியை தேஜஸ்வி யாதவ் வெளியிடுகிறார். ஒரு வேளை இந்த காட்சியை மற்ற மதத்தினர் ரசிப்பார்கள் என்று நம்பலாம். நீங்கள் மீன், யானை அல்லது குதிரை என எதை வேண்டுமானாலும் உண்ணலாம். சாப்பிடுவதை ஏன் காட்ட வேண்டும்?. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஓட்டளிப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.
பயங்கரவாதம்
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முறியடிக்கும் சக்தியாக இந்தியா மாறியுள்ளது. உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு மற்றொரு உதாரணம். கத்தாரின் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளை விடுவிக்கப்பட்டனர். ஓட்டு வங்கி பற்றி காங்கிரஸ் கவலைப்படுகிறது.
பரிதாபப்படுகிறேன்
பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து வெளியேற்றினால் நரேந்திர மோடியை சிறைக்கு அனுப்புவேன் என்று லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள். தேர்தலில் பா.ஜ., வெற்றிபெறப் போகிறது என்பதால் இந்த ஆசைக்கு நான் பரிதாபப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் பிரசாரத்துக்காக, ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும்போது வறுத்த மீன் சாப்பிடும் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

