ரூ.850 கோடி பண மோசடி வழக்கு: விமானத்தை பறிமுதல் செய்த ஈ.டி.,
ரூ.850 கோடி பண மோசடி வழக்கு: விமானத்தை பறிமுதல் செய்த ஈ.டி.,
ADDED : மார் 09, 2025 12:05 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதலீட்டாளர்களிடம், 850 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில், நிதி நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை நேற்று முன்தினம் பறிமுதல் செய்தது.
தெலுங்கானாவின் ஹைதராபாதில், 2021ல், 'பால்கன் கேபிடல் வெஞ்சர்ஸ்' என்ற நிதி நிறுவனம் துவங்கப்பட்டது. 'கேபிடல் புரொடெக் ஷன் போர்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் 'பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங் பிளாட்பார்ம்' என்ற துணை நிறுவனங்களும் துவக்கப்பட்டன.
குறுகிய கால வைப்புத் தொகைக்கு அதிக வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகை தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதை அடுத்து, ஏராளமானோர் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.
வசூலிக்கப்பட்ட 1,700 கோடி ரூபாயில், பாதிக்கு பாதி அளவு பணம் பழைய முதலீட்டாளர்களுக்கு திருப்பி தரப்பட்டது. கடந்த ஜனவரியுடன் நிறுவனங்கள் மூடப்பட்டதால், புதிதாக சேர்ந்த முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து ஹைதராபாத் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான பால்கன் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவன மேலாண் இயக்குநர் அமர்தீப் குமார், உயர் பொறுப்பில் இருந்த ஆர்யன் சிங், யோகேந்தர் சிங் உட்பட 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில், அமர்தீப் உள்ளிட்ட சிலர் வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமர்தீப் தப்பியோட பயன்படுத்திய ஜெட் விமானம் ஹைதராபாதில் இருப்பதாக, இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பலகட்ட தேடுதல் வேட்டைக்குப் பின் ஹைதராபாதின் சாம்ஷாபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 'என் 935 எச் ஹாக்கர் 800ஏ' என்ற எட்டு இருக்கைகள் உடைய அந்த விமானத்தை, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
கடந்தாண்டு, 14 கோடி ரூபாய்க்கு இந்த விமானம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிதி நிறுவன மோசடியில் வந்த பணத்தின் வாயிலாகவே இந்த விமானம் வாங்கப்பட்டுள்ளதாக, அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.